கிரிக்கெட்

மனதுக்குள் குழப்பம்.. சில போட்டிகள் ஓய்வு எடுக்க வேண்டும்- தடுமாறும் ரோகித்துக்கு சேவாக் அறிவுரை

Published On 2023-05-09 11:50 GMT   |   Update On 2023-05-09 11:50 GMT
  • ரோகித் களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார்.
  • அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

இந்த சீசனில் நடந்த 10 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரோகித் சர்மா களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார். அவரிடம் மனதளவில் ஏதோ ஒரு தேக்கம் இருக்கிறது. ஏனெனில் தற்போது அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் பெரிய ரன்களை எடுத்து முந்தைய போட்டிகளில் செய்த சொதப்பலை அவரால் ஈடு செய்ய முடியும்.

என்று சேவாக் கூறினார். 

Tags:    

Similar News