கிரிக்கெட் (Cricket)

கேஎல் ராகுல் அசத்தல் சதம்: முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2023-12-27 14:52 IST   |   Update On 2023-12-27 14:52:00 IST
  • 101 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார்.
  • தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

செஞ்சூரியன்:

தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கேஎல் ராகுலுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணா அவுட் ஆனால் கேஎல் ராகுல் சதத்தை தவறவிடுவார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா சந்தித்த 2-வது பந்து கீப்பரிடம் சென்றது. உடனே ராகுல் 1 ரன் எடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது அசத்தலான சதத்தை பதிவு செய்தார்.

சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News