கிரிக்கெட் (Cricket)
null

முடிந்தவரை அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது எனது பொறுப்பு- ரோகித் சர்மா

Published On 2023-10-12 14:50 IST   |   Update On 2023-10-12 14:56:00 IST
  • நான் எனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி உள்ளேன்.
  • உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தது சிறப்பானது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதுபற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை.

புதுடெல்லி:

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று டெல்லியில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்தியா 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 84 பந்தில் 131 ரன்கள் எடுத்தார். மேலும் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். ரோகித்சர்மா 7 சதங்கள் அடித்து டெண்டுல்கரின் (6 சதம்) சாதனையை முறியடித்தார். அதேபோல் பல சாதனைகளையும் படைத்தார்.

வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

எங்களுக்கு நல்ல வெற்றியாக அமைந்தது. தொடக்கத்திலேயே உத்வேகத்தை பெறுவது முக்கியம். அழுத்தத்தை உள்வாங்கி களத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அதை செய்தோம். வெவ்வேறு திறன்களை கொண்ட வீரர்களை பெற்று இருப்பது அணிக்கு நல்லதாக அமைந்துள்ளது. சுதந்திரமாகவும், அச்சமின்றியும் விளையாடும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இதுபோன்ற திறமைகள் ஒன்றாக சேர்ந்து வரும் போது உங்களுடைய அணியும் நல்ல இடத்தில் இருக்கும். கடந்த போட்டியை போல எங்களது வீரர்கள் அழுத்தத்தை உள்வாங்கி பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் திறமையை கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பற்றிய வெளிப்புற பேச்சுகளால் நாங்கள் கவலைப்படவில்லை. வெளிப்புறத்தில் நடப்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே அணியின் கலவை, ஆடுகளம் அப்போட்டியில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்

நான் எனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி உள்ளேன். உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தது சிறப்பானது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதுபற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை.

ஏனென்றால் முன்னோக்கி செல்ல நீண்ட வழி இருக்கிறது. எனது கவனத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவேன். முடிந்தவரை அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது எனது பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News