கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தி அரையிறுதிக்கு மத்தியப் பிரதேசம் தகுதி

Published On 2024-02-27 05:19 GMT   |   Update On 2024-02-27 05:19 GMT
  • ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
  • மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்தூர்:

89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திரா மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் இந்தூரில் கடந்த 23ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 234 ரன்னும், ஆந்திரா 172 ரன்னும் எடுத்தன.

62 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 107 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திரா 3வது நாள் முடிவில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து இருந்தது. ஹனுமா விஹாரி 43 ரன்களுடனும், கரண் ஷிண்டே 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 69.2 ஓவர்களில் ஆந்திரா 165 ரன்னில் சரண் அடைந்தது. இதனால் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 55 ரன்கள் சேர்த்தார். மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

மும்பையில் நடைபெறும் பரோடாவுக்கு எதிரான கால்இறுதியில் முதல் இன்னிங்சில் மும்பை 384 ரன்னும், பரோடா 348 ரன்னும் எடுத்தன. 36 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மும்பை 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 102 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்து மொத்தம் 415 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ஹர்திக் தமோர் 114 ரன்னும், பிரித்வி ஷா 87 ரன்னும், ஷம்ஸ் முலானி 54 ரன்னும் எடுத்தனர். தனுஷ் கோடியன் 32 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பரோடா சுழற்பந்து வீச்சாளர் பார்கவ் பாத் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

நாக்பூரில் நடைபெறும் விதர்பாகர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விதர்பா 460 ரன்னும், கர்நாடகா 286 ரன்னும் எடுத்தன. 174 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய விதர்பா 196 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் வேகப்பது வீச்சாளர்கள் வித்வாத் கவீரப்பா 6 விக்கெட்டும், வைசாக் விஜய்குமார் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ரவிகுமார் சமார்த் 40 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் மயங்க் அகர்வால் (61 ரன்), அனீஷ் (1 ரன்) களத்தில் உள்ளனர். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 268 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது.

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறும்.

Tags:    

Similar News