கிரிக்கெட்

இன்னும் 55 ரன்களே தேவை... பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுகிறது இங்கிலாந்து

Published On 2022-12-19 13:31 GMT   |   Update On 2022-12-19 13:31 GMT
  • இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
  • இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன

கராச்சி:

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. இந்த இலக்கை இங்கிலாந்து எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றும்.

Tags:    

Similar News