முடிவை அறிவித்துவிட்டால்... ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி
- இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை.
- எந்த விஷயத்தையும் எட்ட முடியாமல் விட்டுவிட்டு, அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 35 வயதான இவர் தற்போதும் முழு உத்வேகத்துடன் 100 சதவீதம் பங்களிப்பை அணிக்காக கொடுத்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். இதனால் டி20 அணியில் சேர்க்கப்பட்டார்.
டி20 கிரிக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் விராட் கோலி ஒருபோதும் ஓய்வு தொடர்பாக பேசியது கிடையாது. இந்திய அணிக்காக தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:-
ஒரு விளையாட்டு வீரராக எங்களுடைய விளையாட்டு வாழ்க்கையும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் நான் சற்று பின்னோக்கி செல்கிறேன். இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், என்னால் எப்போது தொடர்ந்து செல்ல முடியாது.
எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன். ஒருமுறை எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தவுடன் நான் போய் விடுவேன். அதன்பின் நீங்கள் என்னை பார்க்கமாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதம், 30 அரைசதங்களுடன் 8848 ரன்கள் குவித்துள்ளார். 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 சதம், 72 அரைசதம் அடித்துள்ளார். மொத்தம் 13 ஆயிரத்து 848 ரன்கள் அடித்துள்ளார். 117 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 37 அரைசதங்களுடன் 4037 ரன்கள் அடித்துள்ளார்.