மிதாலிராஜ் சாதனையை சமன் செய்த ஹர்மன்பிரீத் கவுர்
- இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
- இது அவருக்கு 12-வது ஆட்ட நாயகி விருதாகும்.
இந்தியா-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
நேற்றைய ஆட்டத்தில் 68 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இது அவருக்கு 12-வது ஆட்ட நாயகி விருதாகும். இதன்மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக முறை ஆட்ட நாயகி விருது பெற்றவர் என்ற சாதனையை படைத்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை ஹர்மன்பிரீத் கவுர் சமன் செய்தார்.
மிதாலி ராஜ் 89 போட்டிகளில் 12 முறை இந்த விருதை வென்றிருந்தார். ஹர்மன்பிரீத் இதுவரை 187 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
தொடர் நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது. இது அவருக்கு 3-வது விருதாகும். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகி விருது வென்ற இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருடன் ஷபாலி வர்மாவும் இணைந்தார்.