கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்யுமா இந்தியா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

Published On 2024-01-03 01:23 GMT   |   Update On 2024-01-03 01:23 GMT
  • முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
  • 2-வது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்னில் சுருண்டது. கே.எல். ராகுல் மட்டும் தாக்குப்பிடித்து சதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.

தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்கள் குவித்தது. இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

பும்ரா மட்டும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார். தென்ஆப்பிரிக்காவின் டீல் எல்கர் 185 ரன்கள் குவித்து இந்தியாவை தோற்கடித்து விட்டார். மேலும் பந்து வீச்சாளரான ஜேன்சன் 84 ரன்கள் எடுத்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

இந்த நிலையில்தான் இன்று 2-வது போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேன்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

 இந்திய தொடக்க பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது அவசியம். விராட் கோலி, கே.எல். ராகுல் ஒரே இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் இந்தியா அதிக ரன்கள் குவிக்க இயலும். ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரும் ரன்கள் குவிப்பது அவசியம்.

பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் மாற்றப்படலாம். அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.

தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா காயத்தால் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும். அதற்கு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த போட்டி முடிவு தெரியக்கூடிய போட்டியாக அமையும்.

Tags:    

Similar News