சினிமா செய்திகள்

'தளபதி' படத்திற்கு பாக்யராஜ் சொன்ன விறுவிறுப்பான மாற்று Climax.. வியந்து கேட்ட ரஜினி!

Published On 2026-01-09 11:37 IST   |   Update On 2026-01-09 11:37:00 IST
  • அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார்.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் விழா நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாக்யராஜை வெகுவாக பாராட்டினார். இதற்கிடையே பாக்யராஜ் நேர்காணல் ஒன்று பங்கேற்று பேசியுள்ளார். அதில் ரஜினியின் தளபதி படத்திற்கு தான் யோசித்த வேறு மாதிரியான கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.

1991 இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி திரைப்படம் வெளியாகி கிளாசிக் அந்தஸ்து பெற்றது அனைவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் துரியோதனன், கர்ணன் நட்பை இன்ஸபிரேசனாக கொண்டு அர்ஜுனனாக அரவிந்த் சாமியை வைத்து தளபதி கதையை மணிரத்னம் அமைத்திருப்பார்.

இந்த படத்தின் தாதா மம்மூட்டி தனக்கு இடையூறு தரும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என தனது உயிர் நண்பன், தளபதி ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்மூட்டி இவ்வாறு சொல்வதற்கு முன் ரஜினி தனது தாயை சந்தித்து, அரவிந்த் சாமி தனது தம்பி என்பதை அறிந்துகொள்வார்.

எனவே மம்மூட்டி கேட்கும் போது தன்னால் கொலை செய்ய முடியாது என ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி, எனது உயிரை எடுத்துக்கோ, நான் உன் உயிர் நண்பன் ஆனால் அவனை கொல்ல சொல்லாதே என மம்மூட்டி இடம் கூற, ரஜினியின் நட்பை பார்த்து அவர் பூரித்துப்போவார்.

நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என அரவிந்த் சாமியை பார்க்க இருவரும் போக, வில்லன் அந்நேரம் வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மமூட்டி ரஜினியின் கண் முன்னேயே உயிரிழப்பார். இது கதை.

நேர்காணலில் பாக்கியராஜ் கூறியதாவது, தளபதி படம் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி, அவனை கொல்ல முடியாது என ரஜினி செல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பது விழுந்துவிடுகிறது.

மம்மூட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.

ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மாமூட்டியிடம் சொல்ல, மம்மூட்டி தனது நண்பன் தனக்காக தம்பியையே கொல்ல சென்றிருக்கிறான் என நெகிழ வேண்டும்.

ரஜினியை தடுக்க மம்மூட்டி கிளம்ப வேண்டும். மம்மூட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்த் சாமியை கொன்றுவிடுவாரா, அல்லது மம்மூட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்பவர்களிடையே ஏற்படும்.

இதை ஏன் மணிரத்னம் யோசிக்கிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸை அவரிடம் கூறினேன்.

அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கதபாத்திரம் அந்த இடத்தில் சட்டென விழுந்துவிட்டதே என்று தோன்றியது என்று ரஜினியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News