சினிமா செய்திகள்
null

எட்ரா கொக்கிய: கூலி படத்தின் திரைவிமர்சனம்

Published On 2025-08-14 12:14 IST   |   Update On 2025-08-14 17:29:00 IST
  • நண்பனுக்காக பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ்
  • ரஜினிகாந்த், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார்.

கதைக்களம்

நாயகன் ரஜினிகாந்த் சென்னையில் மேன்சன் நடத்தி வருகிறார். விசாகப்பட்டினத்தில் உள்ள இவரது நண்பர் சத்யராஜ் இறந்ததாக தகவல் அறிந்து அங்கு செல்கிறார். சென்ற இடத்தில் சத்யராஜ் இயற்கையாக சாகவில்லை என்றும் யாரோ ஒருவர் சத்யராஜை அடித்து கொலை செய்து இருப்பதாகவும் ரஜினி தெரிந்துக் கொள்கிறார். தன் நண்பனை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார் ரஜினி.

இறுதியில் சத்யராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? அவர்களை ரஜினி பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரஜினிகாந்த், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நண்பனுக்காக பழிவாங்க துடிப்பது, கொன்றதுக்கான காரணத்தை தேடி அலைவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நாகார்ஜுனா. இவரது உடை, நடை அனைத்தும் ரசிக்க வைக்கிறது. சௌபினின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அடியாளாகவும், நல்லவன் போல் நடித்து வில்லனாகவும் அசத்தி இருக்கிறார். சத்யராஜ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது மகளாக வரும் ஸ்ருதி ஹாசன் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். சார்லி, காளி வெங்கட், கண்ணா ரவி, லொள்ளு சபா மாறன், ரெபா மோனிகா, மோனிஷா பிளசி என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

நண்பனுக்காக பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. பல காட்சிகளில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் வைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். பல கதாபாத்திரங்களின் எண்ட்ரியும் அவர்களின் நடிப்பும் வியக்க வைக்கிறது. கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தில் இருக்கும் அனைத்தும் அம்சங்களும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.

இசை

அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து இருக்கிறது.

ஒளிப்பதிவு

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பல காட்சிகளில் பளிச்சிடுகிறது.

தயாரிப்பு

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ரேட்டிங்: 4/5

மொத்தத்தில் கூலி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது!!!!!

Tags:    

Similar News