தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெடிக்கப் போகும் 3 தமிழ் படங்கள்
தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான்.
முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.
தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
டியூட்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டீசல்
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.