சினிமா

ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி

Published On 2018-08-03 07:15 GMT   |   Update On 2018-08-03 07:15 GMT
“அண்ணனுக்கு ஜே” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் தினேஷ், நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன் என்று கூறினார். #AnnanukkuJai #Dinesh
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள படம் “அண்ணனுக்கு ஜே”.

அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ‘அட்டகத்தி’ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-

இது தனிப்பட்ட நபர் யாரையும் குறிக்கும் கதை அல்ல. எனக்காக எழுதப்பட்ட கதை. பொதுவான ஒரு அரசியல் கட்சி பற்றிய கதை. நான் மட்டை சேகர் என்ற பெயரில் ஒரு ஏழைத் தகப்பனின் மகனாக வருகிறேன்.

அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும்.



சின்ன வயது முதலே எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணமும் உண்டு. அதற்கு அனுபவம் வேண்டும்.

நியாயமான கோரிக்கைக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அந்த ஆதங்கம் தான் அரசியலில் இறங்க காரணம். இங்கே வழிகாட்ட சரியான தலைவர் இல்லை. கேள்வி கேட்க கூட மறுக்கிறார்கள்.

நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன். இப்போது அவர் நன்றாக செயல்படுகிறார். பொதுமக்களில் ஒருவனாக கூறுகிறேன். அவர் பேசுவது எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் நேர்த்தியாக அணுகுகிறார்.

“நீட்” தேர்வுக்காக லயோலா கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பேசினேன். பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். அடுத்த கட்டத்துக்கு செல்வதில்லை. ரஞ்சித் எடுக்கும் முயற்சிகள் நல்ல நோக்கத்தோடு இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார். #AnnanukkuJai #Dinesh

Tags:    

Similar News