null
2025 புரட்டாசி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
- பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.
- கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோகம்' உருவாகும் விதத்தில் மாதம் தொடங்குகிறது. எனவே தொட்ட காரியங்கள் வெற்றிபெறும். தோள் கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். வெற்றிக்குரிய தகவல்கள் வீடு தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை என்பதால், கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கேட்காமலேயே சில நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் வழிகாட்டுவர். இளைய சகோதரர்களிடம் இணக்கம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். புனித பயணங்கள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்க மேலதிகாரிகள் முன்வருவர். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் குரு. அவர் இப்பொழுது அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆனாலும் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பது யோகம்தான். ஆரோக்கிய தொல்லை அகலும். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக முடியும். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது. குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுய தொழில் செய்ய முன்வருவர். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றமும் உண்டு. அது உயர்வானதாகவே இருக்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு இல்லம் தேடி நல்ல தகவல் வரும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 21, 24, 25, அக்டோபர்: 3, 4, 6, 7, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மகர ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சுக்ரனோடு கேது இணைந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்த்த காரியங்களில் எண்ணற்ற தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். எதிலும் ஈடுபாடு ஏற்படாமல் மனம் அலைபாயும். அதுமட்டுமல்லாமல் மனதில் ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். பிறரின் உதவியை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். குருவின் அதிசார பெயர்ச்சிக்கு பிறகு நெருக்கடி நிலை அகன்று நிம்மதி கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 'பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதம் சம்பள விகிதமும் கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தி ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பது ஒரு அற்புதமான நேரமாகும். ஏழரைச் சனி நடந்தாலும் கூட குருவின் பார்வையால் நல்ல மாற்றம் இல்லம் தேடிவரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க குரு பகவானை வழிபடுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவி தானாக வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தொழில் சிறப்பாக நடைபெறும். என்னயிருந்தாலும் ஏழரைச் சனி நடைபெறுவதால் திடீர் செலவுகளை சமாளிக்க கூடிய சூழல் உருவாகும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தன ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் உண்டு. குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். 'கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே' என்று கவலைப் படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி புரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப சுமை கூடும். பயணங்களால் விரயம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 22, 23, 26, 27, அக்டோபர்: 5, 6, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
கும்ப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு ராகுவும் சேர்ந்திருக்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரனும், கேதுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது. சனியும் ஜென்மச் சனியாக இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கடன்சுமை கூடிக் கொண்டே செல்லும். தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த இயலாது. மனவருத்தம் அதிகரிக்கும். வருமானப் பற்றாக்குறை யின் காரணமாக இனம்புரியாத கவலை மேலோங்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய தகவல் கிடைக்கும். அவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மனதிற்கினிய பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது எதிரிகளின் பலம் மேலோங்கும். எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். வீடு தேடி வம்பு, வழக்குகள் வரலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளத்தை வாடவைக்கும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.
குருவின் பார்வை பலத்தால் ஓரளவு நன்மை கிடைக்கும். என்றாலும் ஏழரைச் சனியும் நடைபெறுகிறதல்லவா?. எனவே புது முயற்சிகள் செய்யத் தொடங்கும் பொழுது, அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறை வேறும். பொதுவாக குரு வழிபாடு இக்காலத்தில் நன்மையை வழங்கும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் சூடுபிடிக்கும். ஆனால் புரட்டாசி 22-ந் தேதிக்கு மேல் குரு அதிசாரமாக பெயர்வதால், மகிழ்ச்சியும், மனநிம்மதியும் குறையும். சனிபகவான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் உயர்வு உண்டு. பெண்களுக்கு கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 25, 26, 29, 30, அக்டோபர்: 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
மீன ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக இருக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. அஷ்டமத்தில் செவ்வாயும் இருக்கிறார். எனவே இக்கட்டான சூழ்நிலையும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இதயத்தை வாடவைக்கும் அமைப்பும் உண்டு. ஆயினும் மாதக் கடைசியில் குருபகவானால் மகிழ்ச்சியும், எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலைமை சீராகி நினைத்தது நிறைவேறும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன் கிடைக்கும். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைக் கொடுப்பார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு அழைப்பு வந்து மனதை மகிழ்விக்கும். முன்பு குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று அதன் மூலம் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசாரமாக செல்கிறார். அங்கு செல்லும் அவர் உச்சமும் பெறுகிறார். அவர் உங்கள் ராசிநாதன் மட்டுமல்ல. தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். எனவே அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எதில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர்.
குருவின் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைவதால், ஏழரைச் சனியால் ஏற்படும் சிரமங்கள் குறையும். சிந்தனைகளில் வெற்றி பிறக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறாமல் தாமதப்படுகின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் வந்துசேரும். மங்கல ஓசை மனையில் கேட்கும். ஒட்டு மொத்தத்தில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் நேரம் இது.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இந்த வக்ரம் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சனி பகவான் வழிபாடு நன்மை பயக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபமும், விரயமும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதிப்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்