கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2026 மாசி மாத ராசிபலன்

Published On 2026-02-12 12:21 IST   |   Update On 2026-02-12 12:22:00 IST

மாற்றத்தை விரும்பும் கடக ராசியினரே

மட்டற்ற மகிழ்ச்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்–களும் உண்டாகும் மாதம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆன்ம பலம் பெருகும்.தடைபட்ட பணிகள் துரிதமாக நடைபெறும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கடந்த கால விருப்பங்கள் தற்போது நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கடன் பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்துவீர்கள்.

ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி கூடி உடல் நலம் சீராகும். உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.

சுமாராக படித்த மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள். முன்னோர்கள் செய்த புண்ணிய பலனால் பங்குச் சந்தை ஆதாயம் திருப்தி தரும். காதல் முயற்சிகள் வெற்றியில் முடியும். ஆன்மீக யாத்திரை செல்லும் விருப்பம் நிறைவேறும். சூரிய சந்திர கிரகணம் 2,8ம் இடங்களில் சம்பவிக்க உள்ளது. கிரகங்கள் தன் கடமையைச் செய்யும். யாரையும் விட்டு வைப்பதில்லை. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு சோதனை இருக்கத்தான் செய்யும். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்தால் இந்த மாதம் இனிய மாதமாக மாறும்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கலாம். குடும்ப பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு உயரும். தாராளமான தன வரவால் ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் உயரும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம், பகை அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் உபரி பணத்தை சேமிப்பதை தவிர்க்கவும்.

முதலீட்டாளர்கள்

தொட்டது துலங்கும் வருடம். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் துவங்கலாம். பழைய கூட்டாளி விலகலாம். திறமையான தொழில் பங்குதாரர் கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அஷ்டம ராகு ஆதிக்கம் உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டிய காலம்.

உத்தியோகஸ்தர்கள்

தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். யாரையும் பகைக்கக் கூடாது. முன்யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும்.

அரசியல்வாதிகள்

அதிகாரப் பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 2ல் கேது இருக்கும் வரை யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக் கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்து விடலாம். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான்.

பெண்கள்

பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்ச்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தம்பதிகள் ஒற்றுமை சிறக்கும் ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். குல, இஷ்ட தெய்வ தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கவனம் தேவை:

சூரிய கிரகணம்:

மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ராசிக்கு 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால், வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும்.

கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை. யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும். எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News