கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2025-11-15 09:56 IST   |   Update On 2025-11-15 09:57:00 IST

கடக ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.

விருச்சிக - சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

தனுசு - செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

விருச்சிக - புதன்

கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Similar News