கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மாசி மாத ராசிபலன்

Published On 2025-02-13 08:32 IST   |   Update On 2025-02-13 08:34:00 IST

எதிலும் முதலிடம் பிடித்து முன்னேறத் துடிக்கும் கடக ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாயும், லாப ஸ்தானத்தில் குருவும் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும். செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அடிக்கடி உடல்நிலையில் தொல்லை உண்டு. திடீர் விரயங்கள் ஏற்பட்டு திகைப்படையச் செய்யும். சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

சூரியன் - சனி சேர்க்கை

இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியன். அஷ்டமாதிபதியான சனியோடு சேர்ந்திருக்கும் இந்த நேரம், கடுமையான நேரமாகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது. மனபயமும், போராட்டமும், பணக் கவலையும் அதிகரிக்கும்.

எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் பணியாளர்களால் தொல்லை உண்டு. சூரியன் மற்றும் சனி பகவானுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் பலம் பெறும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை வந்துசேரும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

மீன - புதன் சஞ்சாரம்

மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதி புதன் நீச்சம்பெறுவது நன்மைதான். விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

அதே சமயம் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், எதிர்பார்த்த ஒரு சில காரியங்களில் தாமதங்களும் ஏற்படலாம். எனவே இக்காலத்தில் புதனுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பிறரை நம்பி செயல்படுவதில் கவனம் தேவை.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பாதை புலப்படும். மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

பிப்ரவரி: 13, 14, 18, 19, மார்ச்: 2, 3, 5, 6, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

Similar News