கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 பங்குனி மாத ராசிபலன்

Published On 2025-03-12 08:55 IST   |   Update On 2025-03-12 08:56:00 IST

துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட கடக ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கிறார். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொதுவாழ்வில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணங்களால் எண்ணியவை யாவும் நடைபெறும்.

தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் போதுமான அளவிற்கு பொருளாதாரம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது.

மீன - புதன் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்திலேயே மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். விரயாதிபதி புதன் பலம் இழந்திருப்பது நன்மைதான். எனவே விரயத்திற்கு ஏற்ற வருமானம் வந்துசேரும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வரலாம். அலுவலகப் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பாராத விரயம் உண்டு.

கும்ப - புதன் சஞ்சாரம்

மீனத்தில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பன்னிரண்டுக்கு அதிபதியான அவர் அஷ்டமத்தில் மறைவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்துசேரும்.

இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். விரயங்கள் சுபவிரயமாக மாறும் வாய்ப்பு உண்டு. கல்விக்காகவோ, கலை சம்பந்தப்பட்ட வகையிலோ செய்த முயற்சி வெற்றிபெறும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழி அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மீன - சுக்ரன் வக்ரம்

மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, சுக-லாபாதிபதியாக விளங்குபவர், சுக்ரன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் உடல்நலனில் கவனம் தேவை. ஜீரணத் தொல்லைகளும், இனம்புரியாத கவலைகளும் மேலோங்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது. குடும்ப பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். மக்கள் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும்.

கடக - செவ்வாய்

உங்கள் ராசிக்கு யோகாதிபதியானவர், செவ்வாய். அவர் பங்குனி 24-ந் தேதி, உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்று வலிமை இழக்கிறார். இக்காலத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குகள், மேலும் தாமதத்தை சந்திக்கும். 'வாகன மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 17, 18, 28, 29, ஏப்ரல்: 2, 3, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

Similar News