search icon
என் மலர்tooltip icon

  கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

  கடகம்

  மாசிமாத ராசிபலன்

  நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

  மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும், 10-ம் இடத்து குருவின் வலிமையும் பலவித மாற்றங்களை உங்களுக்கு வழங்கப்போகிறது. யோககாரகன் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே இருக்கும். என்றாலும், விரயங்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாகவே காணப்படும். வரும் விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தன வரவும் தேவைகேற்ப வந்துசேரும்.

  கும்பம்-புதன்

  மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மேலும் `விபரீத ராஜயோக' அடிப்படையில், திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றிகளை காணலாம். திடீர் திடீரென பண வரவு வந்து மகிழ்விக்கும். பணம் வந்த உடனேயே செலவாகி விடலாம். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும்.

  மகரம்-சுக்ரன்

  மாதத் தொடக்க நாளிலேயே மகரத்திற்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக-லாபாதிபதியான சுக்ரனின் பார்வை உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

  மீனம்-புதன்

  மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். விரயாதிபதி நீச்சம் பெறுவது நன்மை தான். விரயத்திற்கேற்ற தொகை வந்து சேரும். வீடு மாற்றமும் நன்மை தரும். எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதில்லை. காரியத்தை தொடங்கி விட்டால் பணம் தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கலாம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள்.

  கும்பம்-சுக்ரன்

  மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள தனாதிபதி சூரியனோடு சேருவதால் தனவரவு திருப்தி தரும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். `வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை-ஆபரண சேர்க்கை உண்டு.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கலைஞர்களுக்கு கவுரவ பதவி கிடைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
  பிப்ரவரி:
  13, 14, 17, 18, 24, 25,

  மார்ச்: 1, 2, 11, 12.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

  கடகம்

  தை மாத ராசிபலன்

  எல்லோரிடமும் எளிதில் பழகும் ஆற்றலைப் பெற்ற கடக ராசி நேயர்களே!

  தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கியிருப்பதால் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. சொந்த வீட்டில் சனி சஞ்சரிப்பதால் வரும் விரயங்கள் சுபவிரயங்களாக மாறும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும் நேரமிது.

  மேஷ-குருவின் சஞ்சாரம்!

  மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பலவித மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, 'பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் உண்டு' என்பது பழமொழி. திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல மாற்றங்கள் வரலாம். இல்லையேல் இதயத்திற்கு இனிமை தராத விதத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.

  எனவே இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய எடுத்த முயற்சி கைகூடும்.

  தனுசு-சுக்ரன்!

  ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் வழங்குவர். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். பதவியில் இருப்பவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும்.

  மகர-புதன்!

  ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் வருகின்றார். எனவே, `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும், விரயாதிபதி புதனும் இணையும் இந்த நேரத்தில் மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்புகள் வரும். தங்கு தடைகள் தானாக விலகும். வீடு கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

  மகர-செவ்வாய் சஞ்சாரம்!

  பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் உச்சம் பெறுவதால் எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. பொருளாதார நிலை உச்சம் பெறும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும்.

  வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத் தவர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டிய நேரமிது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  ஜனவரி: 17, 18, 21, 22, 28, 29, பிப்ரவரி: 1, 2,

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

  கடகம்

  மார்கழி மாத ராசிபலன்

  கொள்கைகளை விட்டுக்கொடுக்காத கடக ராசி நேயர்களே!

  மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இதுவரை கண்டகச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த உங்களுக்கு இப்பொழுது அஷ்டமத்துச் சனி ஆரம்பிக்கப் போகிறது. எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென பிரச்சினைகளை சந்திக்கும் சூழ்நிலையும், மனக்குழப்பமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடுகள் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலமே உற்சாகத்தோடு பணிபுரிய இயலும்.

  கும்ப ராசியில் சனி

  மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி வளர்ச்சிப் பாதையில் தளர்ச்சியை உருவாக்கப் போகிறது. வருமான பற்றாக்குறை அதிகரிக்கும். எதிரி களின் பலம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது. சனிக்கவசம் பாடி முறையாக சனி பகவானை வழிபடுவதன் மூலம் முன்னேற்ற பாதிப்புகள் ஓரளவு அகலும்.

  விருச்சிக சுக்ரன்

  மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவதால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் உங்களை விட்டு விலகலாம். தொழில் வளர்ச்சி கருதி முதலீடுகள் செய்ய, வாங்கிய இடத்தை விற்க நேரிடும். அணிகலன்களை அடமானம் வைக்கும் சூழ்நிலைகூட உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் தீவிரமாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.

  தனுசு-செவ்வாய்

  மார்கழி 11-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகளை முறியடிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கும். குரு வீட்டில் செவ்வாய் இணைவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

  தனுசு-புதன்

  மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட சறுக்கல்கள் அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நீடித்த நோய் அகல, மாற்று மருத்துவம் கை கொடுக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று விருப்ப ஓய்வில் வெளிவந்தவர்கள், சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

  பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் வருவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். கலைஞர்களுக்கு திடீர் திடீரென வாய்ப்புகள் கைகொடுக்கும். மாணவ, மாணவியர் களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்கள் பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்பட வேண்டிய நேரமிது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

  பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  டிசம்பர்: 20, 21, 24, 25,

  ஜனவரி: 1, 2, 4, 5.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

  கடகம்

  கார்த்திகை மாத ராசிபலன்

  சிறப்பான வாழ்வமைய சிந்தித்து செயல்படும் கடக ராசி நேயர்களே!

  கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனி வலுவடைந்து சஞ்சரிக்கின்றார். தொழில் ஸ்தானத்தில் உள்ள குரு வக்ரம் பெறுகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். அதைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவிட நேரிடும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலாவிட்டாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி வரும்.

  வக்ர குருவின் ஆதிக்கம்

  மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும் பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ம் இடத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் அவர் வக்ரம் பெறும் பொழுது பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வாகனங்களால் தொல்லைகளும், விரயங்களும் உண்டு.

  அயல்நாட்டு அழைப்புகளை நம்பிச் செயல்படுவதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். சில்லரை கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். என்றாலும், தொழிலை விரிவுசெய்ய பெரிய அளவில் கடன் வாங்கும் சூழல் ஒரு சிலருக்கு ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் குரு கவசம் பாடி குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

  துலாம்-சுக்ரன்

  உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் மாதத்தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே மகிழ்ச்சி கொஞ்சம் குறைவாகவே இருக்கலாம். தாய் வழி உறவினர்களால் தொல்லை உருவாகலாம். சொத்து விற்பனையில் தடுமாற்றங்கள் உண்டு. ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார்.

  துலாம் சுக்ரனுக்கு சொந்த வீடாகும். சுக ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்கலாம்.

  தனுசு- புதன்

  உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்தைப் பார்க்கும் பொழுது விரயங்கள் மேலோங்கும். வீடு மாற்றங்கள், வாகன மாற்றங்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு சென்று தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும்.

  உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்னிட்டு சுபச்செலவுகள் ஏற்படலாம்.

  கடகம்

  ஐப்பசி மாத ராசிபலன்

  18.10.2023 முதல் 16.11.2023 வரை

  பொதுவாழ்வில் புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

  ஐப்பசி மாத கிரக நிலைகைள ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாத தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரம் பெற்று சஞ்சரிக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது இருக்கின்றது. சனி பகவான் இம்மாதம் வக்ர நிவர்த்தியான பிறகு அதன் கடுமை கொஞ்சம் அதிகரிக்கின்றது. ஆரோக்கியத் தொல்லை, அருகில் இருப்பவர்களால் தொல்லை, வருமானப்பற்றாக்குறை போன்றவைகள் வரலாம். எதையும் நினைத்த நேரத்தில் செய்ய இயலாது.

  சனி வக்ர நிவர்த்தி!

  ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். சனி உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் வலிமை அடைவதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்பட்டு மனக்கலக்கத்தை உருவாக்கும். ெவளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களுக்கு அங்கு வேலை கிடைக்காமல் தத்தளிக்க நேரிடும். குடும்பப் பிரச்சினை கொடிகட்டிப் பறக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். பெற்றோர்கள் மற்றும் தாத்தா-பாட்டிகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். நீங்கள் கேட்காமலேயே வேறு இடத்திற்கு மாற்றம் செய்வர்.

  குரு வக்ரம்!

  மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மை தான். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் சில இடையூறு சக்திகளும் வந்து அலைமோதும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழலும் உருவாகும். கவலை என்ற மூன்றெழுத்து அகல கடவுள் வழிபாடு தேவை.

  நீச்சம் பெறும் சுக்ரன்!

  ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். அசுர குரு நீச்சம் பெறுவது யோகம் தான். இடம், பூமி வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பால் அரிய பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலும் கவனம் செலுத்துவீர்கள்.

  விருச்சிக புதன்!

  ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். குழந்தைகளின் மேல்படிப்பு தொடர்பாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் உங்கள் மனதிற்கு பிடித்த விதம் அமையும். கடன் சுமை படிப்படியாகக் குறையும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினை தலைதூக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 27, 28, நவம்பர் 1, 2, 7, 8, 11, 12.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

  கடகம்

  புரட்டாசி மாத ராசிபலன்

  18-09-2023 முதல் 17-10-2023 வரை

  எதிலும் புதுமை படைக்க வேண்டுமென்று நினைக்கும் கடக ராசி நேயர்களே!

  புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரித்து கண்டகச் சனியாக உலா வருகிறார். ராசிநாதன் சந்திரனோடு கேது சஞ்சரித்து குருவால் பார்க்கப்படுகிறார். எனவே அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகார வர்க்கத்தினரின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அனுபவஸ்தர்களையோ, ஆன்மிகப் பெரியோர்களையோ, ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது.

  புதன் வக்ரம்

  புரட்டாசி 10-ந்தேதி கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகவும் இருக்கிறது. சகாய ஸ்தானாதிபதி புதன், சகாய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது யோகம்தான். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் நன்மை கிடைக்கும். எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்துச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாய்தாக்கள் ஓயும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து கூட அழைப்புகள் வரலாம்.

  துலாம் - செவ்வாய்

  புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், சுக ஸ்தானத்திற்கு வருவதால் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். கடன்சுமை தீரப் புதிய வழிபிறக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

  துலாம் - புதன்

  புரட்டாசி 28-ந்தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்குஅதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். விரயாதிபதி 4-ல் சஞ்சரிக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். கல்யாண முயற்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் செலவிடுவீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழல் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பாசம்மிக்கவர்களின் நேசத்தால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு பணிநீடிப்பும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கலைஞர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ- மாணவிகளுக்கு வெற்றிபெற முழு முயற்சி தேவை. பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதோடு பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  செப்டம்பர்: 20, 23, 24, 30, அக்டோபர்: 11, 12, 15, 16. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

  கடகம்

  தமிழ் மாத ராசிபலன்கள்

  18-08-2023 முதல் 17-09-2023 வரை

  பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

  ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். மாதத்தின் இடையில் கண்டகச் சனியாக மாறப்போகிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீண் விவகாரங்கள் பலவும் வீடு தேடி வரும். வாகனத் தொல்லைகளால் மன வாட்டம் ஏற்படும்.

  உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வதனால், கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதப்படும். கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்கக் கூடிய நேரம் இது.

  கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி முதல், உங்கள் ராசியான கடகத்திற்கு சுக்ரன் வருகிறார். சுக - லாபாதிபதியான சுக்ரன், வக்ர நிலையில் உங்கள் ராசிக்கு வருவது யோகம்தான். ஆரோக்கிய பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வானங்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

  பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். 'புதியதாக சொத்துக்கள் வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படலாம்.

  கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், சகாய ஸ்தானத்திற்கு வருவதால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும்.

  சகோதர ஒற்றுமை பலப்படும். உங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள் இப்பொழுது விலகிச் செல்வர். உற்றார் - உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாற்று இனத்தவர்களின் ஆதரவும் திருப்தி தரும். தொழில் வியாபாரம் சூடுபிடிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்கும். மக்கள் சேவையில் ஈடுபட்டு மகத்தான புகழைப் பெறுவீர்கள்.

  மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம், வளர்ச்சியில் கொஞ்சம் தளர்ச்சியைக் கொடுக்கலாம். கண்டகச் சனி என்பதால், கவலை அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். சில காரியங்களை யோசிக்காமல் செய்துவிட்டு, பிறகு 'ஏன் செய்தோம்?' என்று வருத்தப்படுவீர்கள்.

  எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியாது. தெய்வ வழிபாட்டிலும் கவனம் செலுத்த இயலாது. உற்றார், உறவினர்களின் பகையும், மற்றவர்களின் கருத்து வேறுபாடுகளும் மனதை வாட்டும். அனுபவஸ்தர்கள் மற்றும் அருளாளர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

  புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். விரயாதிபதி வக்ர நிவர்த்தியாவதால் விரயங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், நாடு மாற்றம் வந்து சேரும். 10-ல் குரு இருப்பதால் அதன் பார்வை புதன் மீது பதிகிறது. எனவே காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மறைமுகப் போட்டிகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்களில் தாமதம் ஏற்படும்.

  வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் இருந்து அழைப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 18, 19, 21, 22, செப்டம்பர்: 2, 3, 6, 7, 13, 14, 15.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

  கடகம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  17.7.23 முதல் 17.8.23 வரை

  எப்போதும் ஏதாவது ஒரு சிந்தனையிலேயே இருக்கும் கடக ராசி நேயர்களே!

  ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதோடு சனியை, செவ்வாய் பார்க்கும் அமைப்பும் உள்ளது. எனவே அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக விரயங்கள் மனக்கவலையை உண்டாகும். இரவு நேரப் பயணங்களை மாற்றிக் கொள்வது நல்லது. பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்வதோடு பணியில் உள்ள மேலதிகாரிகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றம், உத்தியோக மாற்றம், இடமாற்றம் போன்றவை தானாக வந்து சேரும். வரும் மாற்றங்களால் நன்மை உண்டு.

  மேஷ - குரு சஞ்சாரம்

  நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். 10-ல் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும் என்பது பழமொழி. ராகுவோடு இணைந்திருக்கும் குரு பகவான், கேதுவைப் பார்க்கிறார். எனவே வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமைய, வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். எப்படி இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. குடும்ப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் சுபகாரியங்கள் நல்ல முடிவிற்கு வரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாய் மாறும்.

  குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் ஆரோக்கியம் சீராகும். வீடு மாற்றம், இடமாற்றம் மகிழ்ச்சி தரும். நல்ல காரியங்கள் படிப்படியாக நடைபெற வழிபிறக்கும். 6-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் உத்தியோக முன்னேற்றம் உண்டு. ஒருசிலர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையப் புதிய வழிபிறக்கும். வாழ்க்கைத் தரம் உயர புதிய முயற்சி எடுப்பீர்கள்.

  சிம்ம - புதன்

  ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது நன்மை - தீமைகள் கலந்தே நடைபெறும். குறிப்பாக வருமானம் உயரும். ஒரு சிலருக்கு வீடுமாற்றம், இடமாற்றம் வரலாம். தூர தேசத்திலிருந்து வரும் வேலைக்கான அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். உங்கள் முன்னேற்றத்தையும் முன்னதாகவே சொல்வதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும். வாகனப் பழுதுகளும், வாகன மாற்றங்களும் வந்துசேரும் நேரம் இது.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போராடி வெற்றிபெறும் யோகம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்கள் போட்டிகளைத் தாண்டி லாபம் குவிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் அதிகரித்தாலும் வருமானம் ஓரளவு வந்து கொண்டே இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  ஜூலை: 21, 22, 26, 27, ஆகஸ்டு: 6, 7, 11, 12, 17.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

  கடகம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசி நேயர்களே!

  ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். ஆனி 17-ந் தேதிக்கு மேல் சிம்மத்திற்கு செல்கிறார். மாதத் தொடக்கத்தில் வலிமை செய்யும் கிரகம் வலிமை இழந்திருப்பதால் மனநிம்மதிக் குறைவு உருவாகும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதாலும், மாதம் முழுவதும் செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதாலும் உடல்நலத்தில் கவனம் தேவை.

  மிதுன - புதன்

  ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான புதன், விரய ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனோடு இணைவதால் தன விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்ய பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அதிகரிக்கும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். என்றாலும் நினைத்த துறை கிடைக்காமல் வேறு துறை கிடைக்கலாம்.

  சிம்ம - செவ்வாய்

  ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிவதால் 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்திகள் வந்துசேரும். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனியின் மீது விழுகிறது. எனவே கடுமையான சூழ்நிலை கொஞ்சம் மாறும். கொடுக்கல் - வாங்கல்களில் சரளமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

  சிம்ம - சுக்ரன்

  ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக- லாபாதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். குடும்ப முன்னேற்றம் கூடும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சிம்மத்தில் உள்ள செவ்வாயின் மீது குருவின் பார்வை பதிவதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரலாம்.

  கடக - புதன்

  ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சொந்த வீட்டிலேயே சஞ்சரிப்பதால் சகோதர உறவு பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு தூர தேசப் பயணங்கள் கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அண்ணன்-தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், அதனால் பிரபலமாகும் யோகமும் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் நன்மை உண்டு. உயர் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். மாணவ- மாணவி கள், தங்களுடன் பயிலும் சக மாணவர்களிடம் பழகும் பொழுது கவனம் தேவை. பெண்களுக்கு மனம் மகிழும் காரியங்கள் நடைபெறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 24, 25, 29, 30, ஜூலை: 9, 10, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தாநீலம்.

  கடகம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  15.5.23 முதல் 15.6.23 வரை

  மற்றவர்களின் தேவையை அறிந்து உதவும் கடக ராசி நேயர்களே!

  வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்களுக்கு யோகம் செய்யும் கிரகம் வலிமை இழந்திருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் போகலாம். அஷ்டமத்தில் சனி அடியெடுத்து வைத்திருப்பதால், புது முயற்சிகளில் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் இருக்காது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது அரிது. ஆரோக்கிய சீர்கேடுகள் அவ்வப்போது தலைதூக்கும். எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும், அருளாளர்களின் ஆசிகளையும் பெற்றுச் செய்யுங்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

  ராகு-கேது சஞ்சாரம்

  மாபெரும் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்களை, 'சாயா கிரகம்' என்று அழைப்பது வழக்கம். பின்னோக்கி நகரும் அந்த கிரகங்கள் வழிபாட்டின் மூலம் நமக்கு முன்னேற்றத்தை வழங்கும். 10-ல் இருக்கும் ராகுவோடு குருவும் இணைந்திருப்பதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உடன் இருக்கும் பணியாளர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். அதே நேரத்தில் சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் உடல்நலத்திலும், தாயின் உடல்நலத்திலும் மிகுந்த கவனம் தேவை. வீட்டில் உபயோகப்படுத்தும் விலை உயர்ந்த பொருட்கள் அடிக்கடி பழுதாகி அயர்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. ராகு-கேதுக்களுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

  கடக - சுக்ரன்

  வைகாசி16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் அங்கு நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். எனவே தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். சேமிப்பு உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாறலாம். தாய்வழி ஆதரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் இதுவரை பகை பாராட்டிய மேலதிகாரிகள் இப்பொழுது இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும்.

  ரிஷப - புதன்

  வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்திற்கு வருகையில் விரயத்திற்கேற்ற வரவு வந்துகொண்டே இருக்கும். வீண் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ள முன்வருவீர்கள். நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் கூடிவரும். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். 'படிப்பிற்கேற்ற வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, புதிய பாதை புலப்படும். தொழில் செய்பவர்கள், விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. கணவன் - மனைவி ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 16, 17, 21, 22, 27, 28, ஜூன்: 1, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

  கடகம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  14.4.2023 முதல் 14.5.2023

  புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு புதுமை படைக்கும் கடக ராசி நேயர்களே!

  சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் யோககாரகன் செவ்வாய் வீற்றிருக்கின்றார். விரய ஸ்தானத்தில் செவ்வாய் விற்றிருப்பது அவ்வளவு நல்லதல்ல. மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கமும், வாக்கிய கணித ரீதியாக உருவாகின்றது. இருப்பினும் மாதத் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே முதல் வாரம் முன்னேற்றமாக அமையும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் வாழ்க்கைப் பாதை சீராகும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமத்துச் சனியின் வலிமை அதிகரிக்கும். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். தெய்வீக சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  சனியின் சஞ்சாரம்

  மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்துச் சனி நடைபெறுகின்றது. சனி தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும், சில நேரங்களில் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது. ஆடம்பரச் செலவுகளால் கையிருப்புக் கரையலாம். தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உடன் இருப்பவர்களால் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படும். உடல்நலத்திலும் கவனம் தேவை.

  மேஷ - குரு

  சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு வருகின்றார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருவதால் பதவியில் மாற்றங்கள் உருவாகலாம். குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்கும். குறிப்பாக குடும்பத்தில் இதுவரை நடைபெறாதிருந்த சுபநிகழ்வுகள் இப்பொழுது துரிதமாக நடைபெறத் தொடங்கும். 'நடக்கும் தொழில் மந்தநிலையில் இருக்கின்றதே அதை மாற்றுவோமா? அல்லது புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டு கூடுதல் முதலீடு போட்டு நடத்தலாமா?' என்று குழப்பத்தில் இருந்த உங்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கப்போகின்றது. தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க நீங்கள் இப்பொழுது துணிந்து முடிவெடுத்து தொழிலில் லாபம் குவிக்க வழிபிறக்கும். தாயின் உடல்நலம் சீராகும். கடன்சுமை குறையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

  மிதுன - சுக்ரன்

  சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பெருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பு கிட்டும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

  இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

  பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 18, 19, 22, 23, 30, மே: 1, 5, 6

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

  கடகம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  15.3.2023 முதல் 13.4.23 வரை

  மனதில் நல்லதையே நினைக்கும் கடக ராசி நேயர்களே!

  பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். எனவே தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். நம்பித் தொட்ட காரியங்களில் எல்லாம் நன்மை கிடைக்க வேண்டு மானால், பொறுமையும் நிதானமும் தேவை. அடுத்தவர்கள் பேச்சைக் கேட்பதன் மூலம் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக இருக்கும். அதேநேரம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கத்தான் செய்யும்.

  இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கப் போகிறது. எனவே வளர்ச்சியில் தளர்ச்சி கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். முயற்சி கொஞ்சம் அதிகமாக இருந்தால் மகிழ்ச்சியை ஓரளவேனும் வரவழைத்துக் கொள்ள இயலும். இதற்கிடையில் செவ்வாய் மிதுனத்தில் இருந்தபடியே சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே மற்றவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் பொழுது படித்துப் பார்த்துக் கையெழுத்திடுவது நல்லது. தனக்குத் தானே எதிரி என்பது போல, உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். தொழில் வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

  மேஷ - புதன்

  பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு சகாய, விரய ஸ்தானாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். முடங்கிக் கிடந்த தொழில் ஆதாயம் தரும். இந்த நேரத்தில் கூட்டாளிகள் தொழிலைக் கைப்பற்றிக்கொள்ள நினைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இனிமை தராத இடமாற்றங்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வின் காரணமாக, ஒரு சிலர் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்று பணிபுரிய நேரிடலாம். வெளிநாட்டு வாய்ப்புகளை நம்பிச் செல்பவர்கள், அந்த வேலை நிரந்தரமானதாக இருக்குமா? என்பதை அறிந்து செல்வது நல்லது.

  ரிஷப - சுக்ரன்

  பங்குனி 24-ந் தேதி சுக, லாபாதிபதி சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். இல்லத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் நடைபெறலாம். குறிப்பாக வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கை கூடும். பணியாளர்களின் பிரச்சினை படிப்படியாக குறையும். குடும்பத்தினர்களுடன் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வாய்ப்பு, நல்ல நிறுவனங்களில் இருந்து வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரலாம். உங்களை விட்டு விலகி இருந்த உறவினர்கள், தானாக வந்து சேர்வார்கள்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். தொழில் முனைவோர், தொல்லை தரும் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவா்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வந்தாலும், அதனை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம்தான். மாணவ - மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். விளையாட்டில் உள்ள ஆர்வத்தை படிப்பில் காட்டுவது நல்லது. கருத்து வேறுபாடு அகல, கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ளலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

  இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்:-

  மார்ச்: 22, 23, 26, 27, ஏப்ரல்: 2, 3, 4, 8, 9.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

  ×