கடக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும், இணைந்திருக்கிறார். எனவே நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிச் செல்லும். தனாதிபதி சூரியன் நீச்சம்பெறுவதால் வரவேண்டிய பாக்கி கள் ஸ்தம்பித்து நிற்கும். எவ்வளவு முயற்சி எடுத்தும், பிரபலஸ்தர்களின் நட்பை பெற்றிருந்தாலும் எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மைக்கு வழிகாட்டும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியான கடக ராசியில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசார பெயர்ச்சியாக இருந்தாலும், குரு பகவான் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். 'வரன்கள் வந்து வாசலோடு நின்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. மன அமைதிக் குறைவை உண்டாக்கும். அதிக விரயங்களால் கலக்கமும், இடையூறுகளை சமாளிக்க முடியாமல் தடுமாற்றமும் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பொழுது, நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். எதை எந்த நேரத்தில் செய்ய நிைனத்தாலும், அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பட்ட சிரமங்கள் தீர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் உருவெடுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்குச் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் எதையும் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, நவம்பர்: 3, 4, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.