கடினமான காரியங்களைகூட முடித்துக் காட்டும் கடக ராசி நேயர்களே!
ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கிறார்கள். இதன் விளைவாக மிகுந்த பிரயாசை எடுத்தே எந்த காரியத்தையும் சாதிக்க முடியும். தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீடித்த நோய் அகன்று மீண்டும் தலை தூக்கும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் ஜென்மத்திற்கு வரும் பொழுது, நல்ல விரயங்களையே உங்களுக்கு ஏற்படுத்துவார். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு. வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்நின்று நடத்தி வைப்பீர்கள்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். வளர்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அயல்நாட்டு பயண முயற்சி கைகூடும். நீண்ட நாளைய எண்ணங்கள் படிப்படியாக நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை அஷ்டமத்து சனியின் மீது பதிவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வளர்ச்சியில் குறுக்கீடுகள் வரலாம். வாய்தாக்களும், வழக்குகளும் வந்துகொண்டே இருக்கும். எதை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நேரமிது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. மாணவ-மாணவியர்களுக்கு மந்தநிலை ஏற்படும். பெண்களுக்கு விரயங்கள் கூடுதலாக இருக்கும். குடும்பச் சுமை அதிகரிக்கும்.
இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.