ராசிபலன்

2025 புரட்டாசி மாத ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

Published On 2025-09-17 09:16 IST   |   Update On 2025-09-17 09:16:00 IST
  • பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும்.
  • உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

மேஷ ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தேக நலன் சீராகும். சொத்துக்களால் யோகமும், சொந்தங்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் சில காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகூடும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சென்ற மாதம் 6-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தபோது, கடன் சுமை அதிகரித்து, கவலைகள் மேலோங்கி இருக்கலாம். அந்த நிலை இப்பொழுது மாறும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துசேரும். சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானம் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு உச்சம் பெறும் நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். குரு பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இந்த இடங்களை உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை. குருவின் பார்வை பலத்தால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார் - உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். ஊர் மாற்றம், இடமாற்றம் நன்மை தரும் விதம் அமையும். தொழிலில் பணியாளர்களின் மாற்றங்களும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் காட்டும் ஆர்வமும் பலன்தரும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாபாதிபதியாக விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை சனி மீது பதிகிறது. எனவே அதன் கடுமை கொஞ்சம் குறையும். மாதக் கடைசியில் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் சனி வலிமையடைவதால் தொழில் வியாபாரத்தில் மிகமிக கவனம் தேவை. நெருக்கடி நிலை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதக் கடைசியில் பண நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுதலான இடத்தால் மனதிற்கு திருப்தி இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் குறுக்கீடுகள் உண்டு. மாணவ - மாணவியர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்க்கை சக்கரம் சுழலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 29, 30, அக்டோபர்: 5, 6, 10, 11, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.

ரிஷப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் கேதுவோடு சஞ்சரிக்கிறார். 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புகழ் கூடும். புனிதப் பயணங்கள் உண்டு. நல்ல சந்தர்ப்பங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். வாகன யோகமும், தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நற்பலன்கள் நடைபெறும். உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பெரிய மனிதர்களின் உதவியால் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். பிள்ளைகளின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு வாங்குவது அல்லது இடம் வாங்கி வீடு கட்டுவது என்ற சிந்தனையை செயல்படுத்த முற்படுவீர்கள். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பதால், பொருளாதார நிலை உச்சம் அடையும். எனவே கடன் சுமை குறையவும் வழிபிறக்கும்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகை கிரகம் ஆவார். இருப்பினும் குருவின் பார்வை சகல தோஷங்களையும் அகற்றும் என்பதால், அவரது பார்வை பதியும் இடங்கள் அத்தனையும் புனிதமடைகிறது. அதன் விளைவாக எண்ணற்ற நற்பலன் உங்கள் இல்லம் தேடி வரலாம். முன்னேற்றம் தரும் குரு பகவானை இக்காலத்தில் முறையாக நீங்கள் வழிபடுவது நல்லது.

குருவின் பார்வை பலத்தால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு அகலும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளமும், குதூகலமான சூழ்நிலையும் உருவாகும். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் இப்பொழுது விலகுவர். கடை திறப்புவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் இப்பொழுது நிறைவேறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவதால், சில காரியங்களில் திடீர் திடீரென மாற்றம் செய்வீர்கள். வாகனங்களால் பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலர் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். தொழில், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வருமானம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, அக்டோபர்: 3, 4, 6, 7, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

மிதுன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குருவும், சந்திரனும் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்கு கிறார்கள். உங்கள் ராசிநாதன் புதன் உச்சம்பெற்று சஞ்சரிக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் தொழில் வளர்ச்சியும், கூடுதல் லாபமும் வந்துசேரும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும், எதிர்கால முன்னேற்றம் கருதியும் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் தடைப்பட்ட மங்கல நிகழ்வுகள், இப்பொழுது நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம் பெறும் இந்த நேரத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். குருவின் பார்வைக்கு பலன் அதிகம் என்பதால் எதிர்பார்ப்புகள் இக்காலத்தில் எளிதில் நிறைவேறும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். இதுவரை அடிக்கடி ஆரோக்கிய குறைபாட்டால் அவதிப்பட்ட நீங்கள், இப்போது உற்சாகத்தோடு செயல் படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். கொடுக்கல் - வாங்கல்களில் தாராளம் காட்டுவீர்கள். வளர்ச்சிக்கு உறுதுணையாக பிற இனத்தார்களின் அறிமுகம் கிடைக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழாக்களை நடத்துவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பாக்யாதிபதியாகவும் சனி விளங்குவதால் தொழிலில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். உற்றார் - உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும். கடமையைச் செவ்வனே செய்ய இயலாது. புதிய முயற்சிகளை பலமுறை செய்த பிறகுதான் வெற்றி காண முடியும். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும் நேரம் இது.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரலாம். மாணவ - மாணவி களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். தேவையான நேரத்தில் உங்கள் தேவைக்குரிய பணம் கைகளில் வந்துசேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, அக்டோபர்: 4, 5, 8, 9, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

கடக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வது கடினம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகைவர் களாக மாறலாம். நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் எதிர்வரும் இடர் பாடுகளை அகற்றும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செலவழிக்கும் சூழல் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், இப்பொழுது சொந்த வீட்டிற்கு குடியேறும் யோகம் வாய்க்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை தீரும். வருமானம் திருப்தி தரும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசியிலேயே குரு உச்சம் பெறுவது யோகம்தான். 'குரு பார்த்தாலும், சேர்ந்தாலும், இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்' என்பர். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பலம்பெற்ற குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் உயரும். இல்லத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 'தொழில் தொடங்க முடியவில்லையே' என்ற கவலை இப்போது மாறும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒரு சில நல்ல காரியங்கள் நடந்தேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மேலோங்கும். இக் காலத்தில் முறையாக வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். எதிர்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும்.

பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகள் பலரும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவர். பெண் களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 24, 25, அக்டோபர்: 6, 7, 11, 12, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Tags:    

Similar News