search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள்
    X

    எடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள்

    உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால் இதுதொடர்பான ஆராய்ச்சிகள், வேறு சில ஆச்சரியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.
    உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால் இதுதொடர்பான ஆராய்ச்சிகள், வேறு சில ஆச்சரியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.

    அவை பற்றி...

    இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டையர்களான கில்லியன்- ஜாக்கி ஆகியோரில் ஒருவர் அடுத்தவரைவிட 41 கிலோ எடை கூடுதலாக உள்ளார். பேராசிரியர் டிம் ஸ்பெக்டன் தனது ஆய்வின் ஒருபகுதியாக, இவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 25 வருடங்களாக கண்காணித்து வருகிறார்.

    அவர்களின் உடல் எடைக்கான பெரும் வேறுபாட்டுக்கு, குடலில் வாழும் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் முக்கியக் காரணம் என நம்புகிறார் அவர்.

    ‘‘ஒவ்வொருமுறை நீங்கள் ஏதாவது சாப்பிடும்போதும் நீங்கள் உங்கள் உடலில் உள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கும் உணவளிக்கிறீர்கள். நீங்கள் தனியாக சாப்பிடுவதில்லை’’ என்கிறார் அவர்.

    இருவரின் மலத்தையும் ஆராய்ந்தபோது, மெலிந்தவரின் மலத்தில் வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தன. ஆனால் ஜாக்கியின் குடலில் வெகு சில நுண்ணுயிரி இனங்களே காணப்பட்டன.

    ‘‘பன்முகத்தன்மையே சிறப்பானது. அது மெலிந்தவரிடம் உள்ளது. நீங்கள் அதிக எடையைக் கொண்டிருந்தால் உங்களது உடலிலுள்ள நுண்ணுயிரிகள் வெவ்வேறு இனத்தில் இருக்காது’’ என்கிறார் ஸ்பெக்டர். இதே போன்ற தன்மையை தான் ஆராய்ந்த ஐயாயிரம் பேரிடமும் கண்டிருக்கிறார் இப் பேராசிரியர்.

    ஆரோக்கியமான மற்றும் பலதரப்பட்ட உணவுமுறையை கடைப்பிடிக்கலாம். நார்ச்சத்து மிக்க உணவை உட்கொள்ளும்போது அவை குடலில் பல்வேறு வகைப்பட்ட நுண்ணியிரிகளை உருவாக்கும் எனத் தெரியவந்திருக்கிறது.

    மக்களில் சிலர் கவனமாக உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகிறார்கள், அத்துடன் உடற்பயிற்சியும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான பலன் கிடைப்பதில்லை. அதேவேளையில் சிலர் குறைவாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விரும்பிய உணவையும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உடல் எடை கூடுவதில்லையே, அது ஏன்?

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உடல் எடை விவகாரத்தில் 40 முதல் 70 சதவீதம், பாரம்பரியமாக நாம் பெற்ற மரபணுவுடன் தொடர்புடையது எனக் கருதுகின்றனர்.

    ‘‘மரபணுக்கள் நமது எடையுடன் தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. உங்களுக்கு சில குறிப்பிட்ட மரபணுக்களில் குறைபாடுகள் இருந்தால் அவை உடல்பருமனை ஏற்படுத்த போதுமானதாக இருக்கலாம்’’ என்கிறார், பேராசிரியர் சதாப் பரூக்கி.

    குறிப்பிட்ட சில மரபணுக்கள் ஒரு மனிதனின் பசியுணர்வைப் பாதிக்கலாம். எவ்வளவு உணவை அவர் உண்ண விரும்புகிறார், என்ன விதமான உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பதில் மரபணுக்களின் பங்கு இருக்கிறது. நாம் எப்படி கலோரியை எரிக்கிறோம், எப்படி நமது உடல் கொழுப்பைக் கையாளுகிறது என்பன போன்ற விஷயங்களிலும் மரபணுக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    குறைந்தபட்சம் 100 மரபணுக்கள் உடல் எடையை பாதிக்கலாம். அதில் எம்சி4ஆர் மரபணு முக்கியமான ஒன்று.

    ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த மரபணு, குறைபாடு உடையதாக இருக்கிறது. இந்த மரபணுதான் பசி மற்றும் பசி ஆர்வத்தை நமது மூளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த மரபணுவில் குறைபாடு உடையவர்கள் அதிக பசி கொண்டவர்களாகவும் அதிக கொழுப்பு உடைய உணவுகளின் மீது அடங்கா ஆசை உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

    ‘‘நீங்கள் உங்களது மரபணுவை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் சிலர் மரபணு அவர்களுக்கு எடை அதிகரிப்பதற்கு தொடர்புடையதாய் இருப்பதை அறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மாறுதல்களைச் செய்துகொள்ள உதவலாம்’’ என்கிறார் பேராசிரியர் பரூக்கி.

    உடல் எடைக்கும் சாப்பிடும் நேரத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ‘‘எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடையும் கூடும். நாம் இரவில் குறைவாக வேலை செய்கிறோம் என்பதால் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதல்ல. நமது உடல் கடிகாரத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறு சாப்பிட வேண்டியிருக்கிறது. பகல் நேரத்தில் உடல் நிறைய கலோரிகளை திறமையாக கையாளுவதற்கும் இரவு நேரத்தில் சற்று குறைவாக கையாளுவதற்கும் ஏற்றவகையில் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது’’

    இக்காரணத்தினால், ஒழுங்கற்ற வேலை நேரம் கொண்டவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. இரவு நேரங்களில் நமது உடல் கொழுப்பு மற்றும் சர்க்கரையை செரிக்க சிரமப்படும். ஆகவே இரவு 7 மணிக்கு மேல் நிறைய கலோரி உள்ள உணவுகளைத் தவிர்ப்பதே நாம் உடல் எடையை குறைக்கவோ அல்லது உடல் எடை கூடுவதை தவிர்க்கவோ உதவக்கூடிய முதல் விஷயம்.

    காலை உணவைத் தவிர்ப்பது அல்லது குறைவாக உண்பது சரியல்ல என்கிறார் பிரவுன்.

    அதாவது, காலைவேளையில் புரதச்சத்து மற்றும் சில கொழுப்புச் சத்து, மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு திருப்தியையும் நீண்ட நேரத்துக்கான சக்தியையும் தரும்.

    அதைத்தொடர்ந்து, ஊட்டச்சத்துமிக்க மதிய உணவையும், சற்று இலகுவான இரவு உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    எப்போதும் கலோரியை கணக்கிட்டு உணவுகளை உட்கொள்வதைவிட, உணவு உண்ணும் நடத்தையில் மாறுதல்களை கொண்டு வருவது நல்லது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    உணவு தொடர்பான காட்சித் தூண்டு தலைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர் களின் அறிவுரை. ஆகவே ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை நமது சமையலறையில் வைத்திராமல், பழம் அல்லது ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை வைத்திருக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக உணவைத் தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்வதை மருத்துவர் ஹார்ப்பர் ஊக்குவிக்கிறார்.

    உடல்பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வெறுமனே இரைப்பையின் அளவைக் குறைப்பது மட்டுமல்ல, ஹார்மோன்கள் உருவாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

    நமது பசியுணர்வு ஹார்மோன் களால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடலில் பசியுணர்வை கட்டுப் படுத்தவும் தூண்டவும் இருவேறு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பசியார்வத்தில் மாறுதல்களை உண்டாக்கும் குடல் நாள ஹார்மோன்களை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். தற்போது இது புதிய மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

    மூன்று ஹார்மோன்களின் கலவையானது ஊசி வழியே தினமும், எடை அதிகமானோருக்கு சுமார் நான்கு வாரங்கள் வரை போடப்பட்டது.

    ‘‘அவர்கள் தற்போது குறைவான பசி உணர்வு கொண்டிருக்கிறார்கள். குறைவாக உண்ணுகிறார்கள். 28 நாட்களில் 28 கிலோ வரை குறைத்திருக்கிறார்கள். இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால் ஒருவர் ஆரோக்கியமான எடையை எட்டும் வரை இதைப் பயன்படுத்த முடியும்’’ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
    Next Story
    ×