search icon
என் மலர்tooltip icon

    அரியானா

    • பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது.
    • நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று அரியானா மாநிலம் ஜாஜ்ஜரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அமித் ஷா பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது. இந்த நேரம் வரை பா.ஜனதா பாராளுமன்றத்தில் இருக்கும்வரை யாரும் இடஒதுக்கீட்டை தொட முடியாது. ராகுல் காந்தி தேர்தல் தொடங்குவதற்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தேர்தல் முடிந்த பிறகு அது காங்கிரஸ் துண்டோ யாத்திரையாகும். தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரரை பார்க்க முடியாது.

    நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார். 400-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் பாபா 40 இடங்களை கூட தாண்டாது. ஒரு பக்கம் பிரதமர் மோடி இடஒதுக்கீடடை பாதுக்கும் வேலையில், மறுபக்கம் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது.

    வாக்கு வங்கிக்காக சட்டப்பிரிவு 370-ஐ காங்கிரஸ் நீண்ட காலமாக அப்படியே வைத்திருந்தது. மோடி ஜி 370-ஐ நீக்கி பயங்கரவாதத்தில் இருந்து காஷ்மீரை விடுவிக்க வேலை செய்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. நம்முடையதாக இருக்கும். அதை திரும்பவும் எடுத்துக் கொள்வோம்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.

    காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சைனி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றனர்.
    • தற்போது 88 எம்.எல்.ஏ.-க்கள் உள்ள நிலையில், பா.ஜனதா அரசு மைனாரிட்டி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் சைனி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் பா.ஜனதாவின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஹூடா தெரிவித்துள்ளார். அதேவேளையில் தங்களுக்கு போதுமான அளவு ஆதரவு இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது.

    ஜனநாயக் ஜன்தா கட்சி (ஜேஜேபி) ஆதரவு அளித்தால் பா.ஜனதா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஜேஜேபி உடனான உறவை பா.ஜனதா முறித்திருந்தது.

    இந்த நிலையில் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, சைனி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம் என துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை கவிழ்ப்பதற்கு வாக்கு அளிப்பார்கள். ஜேஜேபி கொறடா உத்தரவு பிறப்பித்து அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

    தற்போது மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவரான பூபிந்தர் சிங் ஹூடா, மக்களவை தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரினால், நாங்கள் அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்.

    தற்போது காங்கிரஸ் பா.ஜனதா அரசை கவிழ்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்பதில் தெளிவாக உள்ளோம்.

    இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதாவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஜேஜேபி-க்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தற்போது அரியானா சட்டமன்றத்தில் 90 இடங்களில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பாஜனதாவுக்கு 2 சுயேட்சை எம்எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • தற்போதைய 88 எம்எல்ஏ-க்களில் பா.ஜனதாவுக்கு 40 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
    • இதனால் பா.ஜனதா அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது- காங்கிரஸ் தலைவர்

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நயப் சிங் சைனி முதல்வராக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான அரசுக்கு ரந்திர் கோலன், தரம்பால் கோண்டர், சோம்பிர் சங்வான் ஆகிய மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று திடீரென மூன்று எம்எல்ஏ-க்களும் பா.ஜனதா அரசுக்கு கொடுத்கு வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

    அரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதை பான் ஆகியோர் முன்னிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது "அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். விவசாயிகள் தொடர்பான உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

    இது தொர்பாக உரை பான் கூறுகையில் "மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அரியானா மாநிலம் 90 எம்.எல்.ஏ.-க்களை கொண்டது. தற்போது 88 பேர் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். ஜேஜேபி, சுயேட்சை எம்எல்ஏ-க்கள் முன்னதாக ஆதரவு கொடுத்தனர். ஏற்கனவே அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது சுயேட்சைகள் வாபஸ் பெற்றுள்ளனர்.

    நயப் சிங் சைனி அரசு தற்போது மைனாரிட்டி அரசாகும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கூட முதல்வர் பதவியில் நீடிக்க உரிமை பெறவில்லை" என்றார்.

    • சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர்.
    • இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகர் பகுதியில் சிலர் வழக்கம்போல சுற்றுச்சுவர் அருகில் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள்மீது விழுந்தது.

    சுற்றுச்சுவர் இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு, இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தச் சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
    • விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 4 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    பள்ளி பஸ் உன்ஹானி கிராமத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே கிராம மக்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மரத்தில் மோதியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.

    விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கி உள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான் என பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருந்தார்
    • அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது

    அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று அவர் பேசியிருந்தார்.சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான்,

    ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
    • விலங்குகளை கொடுமை படுத்தும் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது என சிலர் பதிவிட்டனர்.

    அரியானாவில் பரபரப்பான சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் எருமை மீது சவாரி செய்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில், சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் எருமை மீது அமர்ந்து சவாரி செய்வதை காண முடிகிறது.

    இதை சாலையில் செல்லும் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சிலர் செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    விலங்குகளை கொடுமை படுத்தும் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது என சிலர் பதிவிட்டனர். இதே போல அந்த வாலிபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.


    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    • நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது.
    • நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.

    அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது. இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்நிலையில், அரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் ராஜினாமா.
    • கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அரியானாவில் கர்னூல் சட்டமன்ற எம்எல்ஏ பதவியை முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.

    விரைவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    ×