என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஒர்க் ஃபிரம் ஹோம்
இனி “ஒர்க் ஃபிரம் ஹோம்” கிடையாது- ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் நிறுவனங்கள்
விரைவில் உலகம் முழுவதும் வொர்க் ஃபிரம் ஹோம் செயல்முறை நிறுத்தப்பட்டு அனைவரும் அலுவலகம் திரும்பும் கட்டாயம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் நாம் வாழும் சூழலையே மாற்றிவிட்டது. பணியாளர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் “ஒர்க் ஃபிரம் ஹோம்” என்று செயல்முறையை பெரும்பாலான நிறுவனங்கள் அமல்படுத்தின.
குறிப்பாக அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கொரோனா தொற்று முடியும் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்து வருகின்றன.
கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட பெரும்பாலான ஊழியர்களை ஏப்ரல் 4 முதல் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகள் அதிகரித்துவிட்டன. தொற்றும் கட்டுக்குள் வந்துவிட்டது. இதையடுத்து அலுவலர்கள் வீடுகளில் சில நாட்களும், அலுவலகத்திற்கும் வந்து சில நாட்களும் ஹைப்ரிட் முறையில் பணியாற்ற வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த மாதத்தில் இருந்து வாரம் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். அதன்பிறகு நிலைமையை பொறுத்து முழுதாக அலுவலகத்தில் இருந்தே பணியாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள், கேம் மற்றும் இசைக்கூடங்கள் ஆகியவை திறக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளது.
கூகுளை தொடர்ந்து மெட்டா, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றன. இந்நிலையில் விரைவில் உலகம் முழுவதும் ஒர்க் ஃபிரம் ஹோம் செயல்முறை நிறுத்தப்பட்டு அனைவரும் அலுவலகம் திரும்பும் கட்டாயம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story