search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு வீரர்"

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.
    • சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29).

    பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். அவர் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தார்.

    இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சத்யராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் சட்ட சபைக்கு வந்தார். சட்டசபை நுழை வாயிலில் நின்று கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை என்று கூச்சலிட்டார்.

    அப்போது சட்டசபை காவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் தனது சான்றிதழ்களை சட்டசபை நுழை வாயிலில் தூக்கி வீசினார். உடனே சபை காவலர்கள் அதனை எடுத்துக்கொடுத்து அங்கிருந்து செல்லும் படி கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டார்.

    இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரியலூரில் 24-ந்தேதி விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர்
    • மேலும் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    அரியலூர்,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.இந்த விளையாட்டு மையங்களில் சேர்வதற்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு போட்டி, அரியலூரில் 24ம்தேதி நடைபெற உள்ளது.

    விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்து அனுப்பலாம். 23ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். மேலும் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திறமை இருந்தும் கூலி வேலைக்கு செல்லும் இறகுப்பந்து விளையாட்டு வீரர் அரசு தனக்கு பொருளுதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
    • பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துக்குடா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர், தேசிய அளவில் 3 முறை தங்கப்பதக்கமும், சர்வதேச அளவில் 3 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கூலித்தொழிலாளியான தாய் கற்பகம் தன்னால் முடிந்த கூலி வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜனகன் தனது 13-வது வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனை அறிந்த தாய் அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார்.

    அப்போதிலிருந்தே பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது ஜனகளின் விளையாட்டு ஆர்வத்தை அறிந்த அலுவலர்கள், சக நண்பர்கள் நாங்கள் உதவுகிறோம் விளையாட்டை தொடருமாறு அவரிடம் கூறியுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து ஜனகன் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து மாநில அளவில், தேசிய அளவில் என பல்வேறு சாதனைகள் படைத்ததோடு, சர்வதேச அளவில் பூட்டானில் நடைபெற்ற செளத் ஏசியன் போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், நேபாளத்தில் நடைபெற்ற ஓபன் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விளையாட போதிய பொருளாதாரம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜனகன் கூறுகையில், நான் இறகு பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் 3 முறை தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இருந்த போதிலும் தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கிலும், வெளிநாடுகளுக்கு சென்று சர்வதேச அளவில் விளையாட லட்சக்கணக்கிலும் செலவாகிறது.

    என்னால் முடிந்தவரை நானே வேலை பார்த்தோ, தாய் மற்றும் நண்பர்கள் உதவியோடு இதுவரை விளையாடி விட்டேன். இனிமேலும் நான் தொடர்ந்து விளையாட தமிழக அரசு எனக்கு பொருளுதவி மற்றும் ஏதேனும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். இதற்கிடையில் தந்தையின்றி தவித்து வரும் எனது மகன் விளையாட்டில் மென்மேலும் உயர தமிழக அரசு உதவிட வேண்டும் என தாய் கற்பகம் கேட்டுக்கொண்டார்.

    ×