search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானவரி சோதனை தேர்தல் ஆணையம்"

    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #EC #VelloreConstituency
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, டி.டி. வி.தினகரன் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்கள்.

    மொத்தம் 23 வேட்பாளர்கள் வேலூர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    வெற்றியை பறிக்க அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. வார்டு வாரியாக பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மறுநாள் (30-ந்தேதி)யும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த சோதனைக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேலூரில் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை கைவிடவில்லை. துரை முருகனின் கல்லூரி, பள்ளியிலும் சோதனை நடத்தினார்கள்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி காட்பாடி அருகே தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அந்த பணத்தை கணக்கிட்டபோது 11 கோடியே 48 லட்சம் ரூபாய் இருந்தது. ஒவ்வொரு பணக்கட்டு மீதும் வார்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தன. எனவே அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பணம் பதுக்கி வைத்திருந்த தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து பூஞ்சோலை சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி கணவர் தாமோதரன் ஆகியோர் மீது தலா 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்வது பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் இது தொடர்பாக காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி னார்கள்.

    முடிவில் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கதிர்ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் தொகுதியில் பணப்பட்டு வாடா செய்ய ஏற்பாடுகள் நடந்து இருப்பது உறுதியானதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் சிக்கியது பற்றிய தகவல் அறிக்கையை வருமான வரித்துறையிடம் இருந்து தமிழக தேர்தல் ஆணையம் பெற்றது.

    அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் தொகுதி நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

    இந்த விவகாரத்தில் நேற்று மதியம் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று மாலை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் பணப்பட்டுவாடாவுக்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

    தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட அறிவிக்கையில் ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்து போட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ரத்து தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று காலை தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் கூறியதாவது:-

    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #VelloreConstituency

    ×