search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிப்பணம்"

    வரியாக கொடுத்த பணம் வீணடிக்கப்படும்போது, அதுகுறித்து அரசிடம் கேள்வி கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாக ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார். #ChennaiHighCourt
    சென்னை:

    புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐகோர்ட்டின் ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் கடந்த 2011-ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த விசாரணை ஆணையம், மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை என்றும் தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விசாரணை ஆணையத்துக்கு எதிராக மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்டு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று விசாரித்தார்.


    அப்போது, ‘அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளினால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதிலும், வரிப்பணம் வீணாகியுள்ளது. ஒரு அரசு கட்டிய சட்டப் பேரவையை மாற்றி அமைப்பதற்கும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு ஆணையம் அமைத்து, அதற்கு ரூ.5 கோடி வரை செலவும் செய்யப்பட்டுள்ளது.

    வரியாக கொடுத்த பணத்தை இவ்வாறு அரசு வீணடிக்கும்போது, அதுகுறித்து கேள்விக் கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், வழக்கை வாபஸ் பெறுவதாக தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, வாபஸ் பெற அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #MKStalin #Karunanidhi
    ×