search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லூனா"

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    ×