search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன் மேயர்"

    • லண்டன் நகர மேயர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்
    • மூவரை தவிர 8 பேர் மேயர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது.

    மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    4 வருட பதவிக்காலம் உள்ள லண்டன் மேயர் பதவிக்கு தற்போது மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் 3-வது முறையாக போட்டியில் இறங்கி உள்ளார்.

    இந்நிலையில், சாதிக் கானை எதிர்த்து தருண் குலாடி (63) மற்றும் ஷ்யாம் பாடியா (62) எனும் இரு தொழிலதிபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.

    இந்த இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்தியா நான் பிறந்த பூமி. எனது வீடு லண்டன். தற்போதுள்ள மேயர், மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்கள் நல்வாழ்விற்காக சுதந்திரமான தடையற்ற கொள்கைகளை மக்களின் ஆலோசனையுடன் செயல்படுத்தவே நான் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கிறேன். அனைவருக்குமான பாதுகாப்பான நகரமாக லண்டனை மாற்றுவேன்" என கூறினார் தருண்.

    தருண், "நம்பிக்கை மற்றும் வளர்ச்சி" (trust and growth) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

    "தற்போது லண்டனின் நிலை என்னை வருத்தமடைய செய்கிறது. இந்த பெருநகரத்தில் வசிப்பவர்களின் வாழ்வு, செயலற்ற ஒரு அமைப்பால் பலியாவது என்னை கவலை கொள்ள செய்கிறது. வரப்போகும் நாட்களில் இரவும் பகலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சவால்களை எதிர் கொண்டு, உலகில் லண்டனுக்கு என முன்னர் இருந்து வந்து தற்போது இழக்கப்பட்டுள்ள முதல் இடத்தையும், தனிப்பட்ட மரியாதையையும் மீட்டு எடுப்பேன்" என கூறினார் ஷ்யாம்.

    ஷ்யாம், "நம்பிக்கைக்கான தூதர்" (ambassador of hope) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

    2024 மார்ச் மாதம், இருவரும் தங்களை ஆதரிப்பவர்களின் கையெழுத்துடனும், டெபாசிட் தொகையுடனும் அதிகாரபூர்வமாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் மாதம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சாதிக் கான், தருண் மற்றும் ஷ்யாம் ஆகியோரை தவிர, 8 பேர் இந்த மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    1947ல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமையாக ஆளப்பட்டு வந்தது. இன்று அந்நாட்டின் தலைநகரை ஆள இந்திய வம்சாவளியினர் தீவிரம் காட்டுவதை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரிட்டன் வரும் இந்திய மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்க வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார். #UK #India
    லண்டன்:

    பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும். பிரிட்டனில் வாழ்வதற்கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எளிதாக விசா கிடைக்கும்.

    நட்புநாடுகளின் பட்டியலில் சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மெக்சிகோ, பக்ரைன், செர்பியா, டொமினிகன் குடியரசு, குவைத், மாலத்தீவு, மெக்காவ் ஆகிய நாடுகளை பிரிட்டன் அரசு சமீபத்தில் பட்டியலில் புதிதாக இணைத்தது.

    எனினும், தூதரக ரீதியில் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது பிரிட்டனில் உயர்கல்வி படிக்கும் ஆசையில் இருந்த இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், லண்டன் மேயராக உள்ள சாதிக் கான் பிரிட்டன் உள்துறை மந்திரி சஜித் ஜாவீத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்திய மாணவர்கள் நலன் கருதி இந்த பரிந்துரையை செய்த லண்டன் மேயர் சாதிக் கானும், பரிந்துரையை அமல்படுத்த வேண்டிய உள்துறை மந்திரி சஜித் ஜாவீத்தும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×