search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதிகை மலை"

    • அகத்தியர் சிலைக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர்.

    தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    இந்த நிலையில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தாமிரபரணி நதியின் உப நதியான கடனா ஆறு, மணிமுத்தாறு, பச்சையாறு, சிற்றாறு உள்பட ஆறுகளும் வறண்டு விட்டன.

    இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி வறண்டு போனால் மே மாதம், பொதிகை மலையில் அகத்தியருக்கு பூஜை செய்வது வழக்கம். எனவே இந்த வருடமும் அதுபோன்ற பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இதற்காக செய்துங்க நல்லூரில் இருந்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன், உச்சிமகாளி சுவாமி உள்பட 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 26-ந்தேதி மாலை கிளம்பினர்.

    இவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தாமிரபரணி ஆர்வலர்கள் வழி அனுப்பி வைத்தனர். இவர்களை போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பொதிகைமலை யாத்திரைக்கு வருகை தந்தனர். கேரள வனத்துறைக்கு உட்பட்ட விதுரா வழியாக கானித்தலம் வந்து, அங்குள்ள சோதனை சாவடியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போனக்காடு என்ற பகுதிக்கு வந்தனர்.

    அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கரடு முரடான பயணத்தினை தொடங்கினர். அவர்கள் தங்கர் பச்சான் கோவில், லாத்தி மோட்டா, கருமேனியாறு, வாலை பிந்தியாறு, அட்டையாறு, புல்வெளி, ஏழுமடங்கு, ஏ.சி. காடு வழியாக அத்திரிமலை பங்களா வந்து அடைந்தனர்.

    அங்கு இரவு ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலை மீண்டும் பயணத்தினை தொடங்கினர். அவர்கள் மதிமயக்கும் சோலை, தாமரைக்குளம், பொங்கலா பாறை, சங்குமுத்திரை, வழுக்கு பாறை, இடுக்கு பாறை ஆகிய மூன்று இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்து ஏறி பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.

    அங்கு அகத்தியர் சிலைக்கு பால், நெய், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் நடந்தது. பின்னர் தாமிரபரணி நதி வற்றாமல் இருக்கவும், பருவ காலங்களில் மழை பெய்யவும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அங்கு வந்த பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர். அவர்கள் வேண்டுதல் நடத்தும் போதே மழை பொழிந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்து கீழே இறங்கியவுடன் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி அத்திரி பங்களாவில் இரவு தங்கி விட்டு, 3-வது நாள் கீழே இறங்கி வந்தனர். பொதிகை மலை உச்சியில் கடந்த 1996-க்கு பிறகு தமிழ்நாடு வனத்துறை பாதை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரள வனத்துறை சார்பில் அனுமதி பெற்று அகத்தியரை தரிசனம் செய்ய மக்கள் செல்கிறார்கள். இவர்கள் வேண்டுதல் நிறைவேறி மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற பக்தர்கள் நம்பிக்கை நிறைவேறட்டும்.

    ×