search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனுகீஸ்வரர் கோயில்"

    • 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம்.
    • புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    மிருகங்கள் இறைவனை பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன. அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    அம்பாளின் பெயர் சாந்த நாயகி. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதி உள்ளது.

    அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.

    கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன. உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.

    அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள். வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.

    ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம். ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தை போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.

    அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாக பரவியிருந்தது.

    திடீரென்று ஒருநாள் அந்த புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. "இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே! இது என்ன வாழ்க்கை! சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்" என அந்தப்பூனை நினைத்தது. யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.

    நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்த பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது.

    இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்த புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.

    'இவரே புனுகீசர்' என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.

    இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு: சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான். அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான். இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.

    ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன. மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.

    நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு. தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.

    ×