search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை தொழிலதிபர்"

    • சம்பவம் நடந்த ஓட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • பணத்தை பறித்து சென்ற 2 வாலிபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி சண்முகபுரம் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 42). இவர் அரிசி, வெங்காயம், கிழங்கு வகைகளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தனது நண்பரான தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(46) என்பவருடன் நேற்று முன்தினம் காரில் நாகர்கோவிலுக்கு சென்று, ஒருவரிடம் தொழில் தேவைக்காக ரூ.25 லட்சம் கடனாக வாங்கிக்கொண்டு தூத்துக்குடிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    பாளை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட நிறுத்தியபோது மர்மநபர் ஒருவர் காரில் இருந்த பணப்பையை திருடிச்சென்றார். இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த ஓட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் சரவணகுமார் தனக்கு சாப்பாடு வாங்குவதற்காக கார் டிரைவரை அனுப்பி உள்ளார். காரின் முன் இருக்கையில் சரவணகுமாரும், பின் இருக்கையில் செல்வராஜூம் இருந்துள்ளனர். பணம் இருந்த பைபின் இருக்கையில் இருந்தது. அப்போது அங்குவந்த மர்மநபர் காரின் கதவை திறந்து பணம் இருந்த பையை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், சரவணகுமார் ஆகியோர் கூச்சல் போடுவதும், அந்த மர்மநபரோ சிறிது தூரத்தில் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மற்றொருவருடன் சேர்ந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.

    இதற்கிடையே கார் டிரைவரான தூத்துக்குடி பி.என்.டி. காலனி 7-வது தெருவை சேர்ந்த செல்வசரவண கண்ணன்(25) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், செல்வ சரவணகண்ணன் டிரைவராக வேலைக்கு சேர்வதற்கு முன்பாக பெயிண்டிங் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் ஒரு வாலிபர் என 2 பேருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொழிலுக்காக சரவணகுமார் குமரி மாவட்டத்திற்கு பணம் வாங்க செல்வதை அறிந்த செல்வசரவண கண்ணன் தனது நண்பர்களுடன் வாட்ஸ்-அப் மூலமாக போனில் பேசி உள்ளார்.

    ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் நேரத்தில் வந்து பணத்தை திருடி செல்லுமாறும், அதன்பின்னர் அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என முடிவு செய்திருந்ததாகவும் தெரியவந்ததது. அவரது தகவலின் அடிப்படையில் பணத்தை பறித்து சென்ற 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    அவர்களை கைது செய்வதற்காக உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தலைமையில் ஒரு தனிப்படை, சப்-இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் ஒரு தனிப்படை என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ×