search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்நிலை வழித்தடம்"

    • நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.
    • குடிநீர் திட்டங்களில் பாதிப்பு ஏற்படாதவாறும், குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண குழு அமைக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் பள்ளம் என 10 கி.மீ., தூரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன.மழைக்காலங்களில் எளிதாக வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த ஓடைகள் ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவுநீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாறியுள்ளன.

    இதனால் நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.தற்போது நாராயணன் காலனி, கழுத்தறுத்தான் பள்ளம் பகுதிகளில் கான்கிரீட் கரைகள் அமைக்கும் பணி ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.இப்பணி நடந்தாலும், நகரின் இயற்கை நீர் வழித்தடங்களில் புதர் மண்டியும், முட்செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. இதனால் மழை வெள்ள நீர் எளிதில் வடிய வழியில்லை. மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதோடு நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளான பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளன.குடியிருப்பு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை நீர் வடிகால் தூர்வாரப்பட்டாலும், பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக தூர்வாரப்படாமல் உள்ளது.மழை பெய்தால், வெள்ள நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஓடியும், தேங்கியும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், ஓடைகள், மழை நீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.

    கிராமங்களிலும் ஓடைகள், குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். தாழ்வான பகுதிகளில்ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    குளம், குட்டைகள் மற்றும் அவற்றின் நீர் வழித்தடங்களை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும். பெய்யும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் சிறப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.கிராமப்பகுதிகளில்தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மின் வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பகுதி வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்.

    வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளுக்கு தேவையான, ரப்பர் படகு, கயிறு, மரங்கள் விழுந்தால் அகற்ற எந்திரம், மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக பராமரிப்பு மேற்கொள்ளும் வகையில், மின் வாரியத்தில் சிறப்பு அதிகாரிகள் குழு அமைக்கப்பட வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், குடிநீர் திட்டங்களில் பாதிப்பு ஏற்படாதவாறும், குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள், பணியாளர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.தற்போது பருவ மழை துவங்க உள்ள நிலையில்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு துறைகளை ஒருங்கிணைக்கவும், சிறப்பு குழு அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×