search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலதா"

    • ஜெயலலிதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
    • தி.மு.க.வை விட்டு வெளியேறிய வைகோ சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிவாலயம் சென்றார்.

    அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லா காலக்கட்டத்திலும் விமர்சிப்பதும் உண்டு. அதேபோல் சாக்கடையில் மலர்ந்த செந்தாமரை என்பது போல் இதே அரசியலில்தான் மக்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் மலர்ந்து, வளர்ந்து தொண்டாற்றி மறைந்தும் வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட அரசியலில் மறப்போம், மன்னிப்போம் என்பதை அரசியல்வாதிகள் தங்கள் அடிப்படை குணமாக வைத்திருந்தாலும் மக்களும் அவர்களை பின்பற்றி மறந்தும், மன்னித்தும் பழகி கொண்டார்கள் என்பதுதான் வேடிக்கை.

    ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் ஒன்றாக கை குலுக்கி இணைந்த கைகளாக அரசியலில் அடுத்த ரவுண்டுக்கு புறப்பட்டு இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எப்படியெல்லாம் ஒருவரையொருவர் தாக்கி கொண்டார்கள். இன்று எப்படித்தான் முகத்துக்கு நேர் நின்று தோளோடு தோள் சேர்த்து ஒன்றாக நிற்க முடிகிறதோ என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதும், ச்சே... என்னடா இது அரசியல் பொழப்பு என்று விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.

    ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகளும், சம்பவங்களும் இப்போது மட்டும் தான் நடக்கிறதா? அரசியல் உருவான காலத்தில் இருந்தே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நம் கண் முன்னால் நிகழ்ந்த சமீப காலத்திய நிகழ்வுகள் சிலவற்றை பார்ப்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. அனல் பறக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர். பாராளுமன்றமே அவரது பேச்சை கேட்டு புருவம் உயர்த்திய காலமும் உண்டு. அது அவர் கருணாநிதி தலைமையேற்று தி.மு.க.வில் இருந்த காலம். எல்லோரும் தலைவர் கலைஞர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் வைகோ அண்ணன் கலைஞர் என்றுதான் அழைப்பார். அந்த அளவுக்கு இருவரும் அண்ணன், தம்பிகளாக ஒரே இயக்கத்தில் இருந்தவர்கள். ஒன்றாக அரசியல் களத்தில் வலம் வந்தவர்கள்.

    காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பிரிவினையை உருவாக்கியது. 1993-ம் ஆண்டு வைகோ தி.மு.க.வை விட்டு வெளியே வந்தார். மறு ஆண்டு ம.தி.மு.க. என்ற அரசியல் இயக்கத்தை எழுச்சியோடு தொடங்கினார். அதை தமிழகமே திரும்பி பார்த்தது என்பதே உண்மை. அவரது அரசியல் பயணம் தனிப்பாதையில் தொடங்கியது.

    அந்தக்காலக்கட்டத்தில் கருணாநிதியை வைகோ சாதாரணமாக விமர்சிக்கவில்லை. எல்லாம் அரசியல் மாற்றங்கள் வரும்போது மறந்து போகும் என்பதுதான் உண்மை. 1999-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் சென்னைக்கு வரும் போது விமான நிலையத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி வரவேற்க சென்றார். அப்போது வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோவும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். கருணாநிதியை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஜெயலலிதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு வாஜ்பாய் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. இணைந்தது. அந்த கூட்டணியில் ஏற்கனவே ம.தி.மு.க.வும் இருந்தது. அவ்வாறு ஏற்பட்ட தொடர்பு பிற்காலத்தில் மீண்டும் தி.மு.க.வோடு வைகோ கூட்டணி அமைப்பது வரை சென்றது.

    தி.மு.க.வை விட்டு வெளியேறிய வைகோ சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிவாலயம் சென்றார். அங்கேயே கலைஞருடன் ஒரே மேடையில் அமர்ந்து அவரை வாழ்த்தியதையும் பார்க்க முடிந்தது. இப்போதும் அதே கூட்டணியில் அவர் தொடர்வதை பார்க்கிறோம்.

    தமிழக அமைச்சராக இருந்தவர்... சபாநாயகராக பணியாற்றியவர்... அ.தி.மு.க.வில் அவை தலைவராக இருந்தவர்... தமிழக அரசியல் களத்தில் இவரது சொல்லாற்றல் சும்மா அதிர வைத்த காலம் அது. தி.மு.க.வில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது அந்தஇயக்கத்தில் இணைந்தார்.

    ஒருஇயக்கத்தில் இருக்கும்போது எதிரான இயக்கத்தை விமர்சிப்பது அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல். அதேபோலத்தான் அ.தி.மு.க.வில் இருந்த போது கருணாநிதியை காளிமுத்து கடுமையாக விமர்சித்ததை அந்த கால அரசியலில் பார்க்க முடிந்தது.

    தமிழக அரசியல் களத்தில் காளிமுத்து மிகப்பெரிய ஆட்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதாவை விமர்சன கணைகளால் துளைத்தெடுத்தவர். மீண்டும் அ.தி.மு.க. ஒன்றுபட்ட போது அதே ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இடம் பிடித்தார். சபாநாயகராகவும் பதவி பெற்றார். அதே நேரம் மீண்டும் கருணாநிதி தலைமையேற்று தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார் என்பதும் தமிழக அரசியல் களம் கண்ட வரலாறு. இவர்களெல்லாம் தங்களின் நாவண்மையால் ஒருவரையொருவர் விமர்சித்ததை பார்த்து உயிர் இருக்கும் வரை இனிமேல் இவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்றெல்லாம் சாதாரண மக்கள் அப்பாவித்தனமாக நினைத்து ஏமாந்துதான் போனார்கள். நான் தி.மு.க.வின் திருவிளக்கு. ஜெயலலிதா கூட்டத்துக்கு தீப்பந்தம் என்று கர்ஜித்த காளிமுத்து அதே ஜெயலலிதாவோடு கைகோர்த்து அமைச்சர் ஆனதையும் தமிழகம் பார்த்திருக்கிறது.

    தற்போது எம்.ஜி.ஆர். கழக தலைவர். இவர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1980களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த காலக்கட்டத்தில் கோவில் உண்டியலில் இருந்த வைரவேல் மாயமானதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டியது மட்டுமல்ல அப்பா... அப்பா.. வீரப்பா வைரவேல் எங்கேப்பா... என்ற கோஷத்தோடு மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடு பயணமும் சென்றார்.

    இந்த சம்பவத்தால் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய மோதல் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தனிக்கட்சியை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன் தன்னை எதிர்த்து நடைபயணம் சென்ற கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியல் வரலாறையும் தமிழகம் பார்த்தது.

    அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது என்பதையும் அரசியல் வாதிகள்தான் கற்றுத்தந்துள்ளார்கள். எனவே இதெல்லாம் சகஜமப்பா என்று கடந்து சென்றால்தான் அரசியலை புரிந்து கொள்ள முடியும்.

    ×