search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை குடிநீர் ஏரிகள்"

    சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #Drinkingwater #Shortage
    சென்னை:

    சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும்.

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது.

    இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும்.

    இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

    இப்போதே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டு விட்டது. தென்சென்னையில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இப்போது வரை சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டுமே உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,375 மி.கனஅடியை எட்டி நிரம்பி காணப்படுகிறது. அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #Drinkingwater #Shortage
    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10 சதவீதமே இருப்பதால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Drinkingwater #Chennai
    சென்னை:

    சென்னை நகருக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    மேலும் வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்தால் 4 ஏரிகளும் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சென்னை நகரை முற்றிலும் ஏமாற்றியது.

    கஜா புயல் காரணமாக சென்னையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறியதால் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    இதனால் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் நிரம்பவில்லை. ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் அளவு 10 சதவீதம் தான் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளில் 4 ஆயிரத்து 865 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது ஆயிரத்து 86 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.

    இந்த தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை ஒரு மாதம்தான் பூர்த்தி செய்யும். இதனால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    2017-ம் ஆண்டு சந்தித்த குடிநீர் தட்டுப்பாட்டை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் தங்கள் தேவைக்கே தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீரை தற்போது திறக்க முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிருஷ்ணா நதிநீர் இப்போது கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

    குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாயில் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 650 மில்லியன் லிட்டர் தண்ணீராக குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.



    மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Drinkingwater  #Chennai

    ×