search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் இடங்கள்"

    நெல்லை, மதுரை, கோவை மண்டலத்தில் என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன. ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம் புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.



    அதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இள நிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    எனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    ×