search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு சாலை மறியல்"

    துறையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சியில் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த பல நாட்களாக காவேரி குடிநீர் முறையாக வரவில்லை. ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரும் கோடையால் வறண்டு போய் விட்டது.

    இதனால் இங்குள்ள பெண்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூர முள்ள வயல் வெளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் உப்பிலியபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் துறையூர்- சேலம் நெடுஞ்சாலையில் உப்பிலியபுரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி விட்டனர். இதனால் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    வெண்ணாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு இன்று காலை பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி அடுத்துள்ள வெண்ணாம்பட்டி அருகே ராஜாஜி நகர், காமராஜர்நகர், முல்லைநகர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த பகுதி தெருக்குழாய்களில் தண்ணீர் முறையாக வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 

    இது குறித்து அந்த பகுதிமக்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி இலக்கியம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை வெண்ணாம்பட்டி- தருமபுரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×