search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ அமைப்பு"

    • விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    சூலூர்:

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. சமீபத்தில் முறித்துக்கொண்டது.

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. பெற முடியாமல் போனதாக கட்சியினர் கருதினர். இதைத்தொடர்ந்து சிறுபான்மையினரின் வாக்குகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.

    இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளித்து வருகிறார்.

    இந்தநிலையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம், கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி கோவை கருமத்தம்பட்டியில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் இந்த விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.

    அதே பகுதியில் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    பா.ஜ.க.வில் இருந்து பிரிந்த பிறகு கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாடு கிறிஸ்தவர்களின் ஆதரவை அ.தி.மு.க. பெறும் மாநாடாக அமையும் என அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ×