search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீட்டு தொகை"

    • கார் விபத்தினால் தன்னால் செயல்பட முடியவில்லை என கமிலா தெரிவித்தார்
    • புகைப்படத்தில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது

    ஐரோப்பாவில் உள்ள நாடு அயர்லாந்து (Ireland). இதன் தலைநகரம் டப்லின் (Dublin).

    அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). அவருக்கு வயது 36.

    2017ல், கமிலா, ஒரு கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு கழுத்து பகுதியிலும், முதுகு தண்டிலும் ஏற்பட்ட காயங்களால் 5 வருடங்கள் செயல்பட முடியாமல் இருந்ததாகவும், அவரால் தன் குழந்தைகளுடன் கூட விளையாட முடியவில்லை என கூறி கார் விபத்தின் காரணமாகத்தான் இந்த செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து காப்பீட்டு நிறுவனத்தில், இழப்பீட்டு தொகையை கோரினார்.

    கமிலா கோரிய ரூ.7 கோடியை ($8,20,000) அவர்கள் தர மறுத்ததால், கமிலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    மேற்கு அயர்லாந்தின் "லைம்ரிக்" (Limerick) பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

    தனது சமகால ஊதிய இழப்புடன் எதிர்கால உத்தேச ஊதிய இழப்புடன் சுமார் ரூ.7 கோடி இழப்பீடு கோரியிருந்தார்.

    அந்த விசாரணையின் போது 2018ல் ஒரு நன்கொடை நிகழ்ச்சியின் போது கமிலா பங்கேற்ற புகைப்படங்கள் அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், ஒரு மணி நேரம் தனது நாயுடன் ஒரு பூங்காவில் அவர் சாதாரணமாக நேரம் கழிக்கும் வீடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.


    அந்த புகைப்படங்களில் ஒன்றில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது.

    இதனால், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "பெரிதாக காணப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை எளிதாக கமிலா எறிவது புகைப்படத்தில் தெரிகிறது. தன்னை முடக்கும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டதாக கமிலா கூறி காப்பீட்டை கோருவது மிகைப்படுத்தலாக தெரிகிறது. எனவே, அவரது வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என தீர்ப்பளித்தார்.

    • மனைவி தரையில் பிணமாக கிடந்தார் என்று லேரி தெரிவித்தார்
    • ஜாம்பியா காவல்துறையின் முடிவை அமெரிக்க அதிகாரிகள் நம்பவில்லை

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பாரடைஸ் வேலி டிரைவ் பகுதியில் பல் மருத்துவராக தொழில் புரிந்து வந்தவர் லேரி ருடால்ஃப். இவரது மனைவி பியான்கா ருடால்ஃப்.

    34 வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், 2016ல் வைல்ட் லைஃப் சஃபாரி எனப்படும் வனவிலங்குகளை அவை வசிக்கும் வனங்களிலேயே வாகனத்தில் அமர்ந்தபடி காணும் சுற்றுலாவிற்காக ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்கு சென்றிருந்தனர்.

    சுற்றுலா முடிந்து ஊருக்கு திரும்பும் நாளான அக்டோபர் 11 அன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தனர்.

    அப்போது பியான்கா அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என ஜாம்பிய காவல்துறையிடம் லேரி கூறினார்.

    இது குறித்து அவர் கூறும் போது, "நான் குளியலறையில் இருந்தேன். ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நான் உடனே பதற்றத்துடன் வெளியில் வந்து பார்த்தேன். அப்போது என் மனைவி தரையில் பிணமாக கிடந்தார். அவர் உடலை சுற்றி எங்கும் ரத்தமாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

    ஜாம்பியா நாட்டு புலனாய்வு அதிகாரிகள், தங்கள் விசாரணையில் பியான்காவின் மரணத்தை தற்கொலை என முடிவு செய்தனர். இதனையடுத்து காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு தொகையை முழுமையாக லேரியிடம் வழங்கியது.

    ஆனால் பியான்காவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் வல்லுனர்கள் ஆகியோரின் ஆய்வில் பியான்காவின் இருதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு, 2 அல்லது 3.5 அடி தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்திருந்தால் இது போன்ற இடைவெளி வர வாய்ப்பே இல்லை எனவும் முடிவுக்கு வந்தது.

    லேரியின் வாக்குமூலத்தை நம்பாத அமெரிக்க மத்திய புலனாய்வு துறை, பல நாடுகளுக்கு சென்று பல சாட்சிகளை விசாரித்து, ஒரு நீண்ட விசாரணையை நடத்தியது. இறுதியாக குற்றம் நடந்த ஐந்த வருட காலம் கழித்து தக்க ஆதாரங்களுடன் லேரியை கைது செய்தது. அவரை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    லேரிக்கு பியான்காவின் பெயரில், பெருமளவில் எடுக்கப்பட்டிருந்த ஆயுள் காப்பீட்டுத்தொகையை தனதாக்கி கொள்ளும் ஆசை வந்தது. மேலும் அவருக்கு லோரி மில்லிரான் எனும் காதலியும் இருந்தார். பியான்காவை சந்தேகம் வராமல் கொன்று காப்பீட்டுத்தொகையை உரிமை கொண்டாடினால், லோரியை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ எந்த தடையும் இருக்காது என்ற முடிவுக்கு லேரி வந்தார்.

    இதனை தொடர்ந்து சுற்றுலா செல்லும் இடத்தில் மனைவியை லேரி சுட்டு கொலை செய்தார். டென்வர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வந்திருக்கிறது. இதன்படி, லேரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக சுமார் ரூ.125 கோடியும் ($15 மில்லியன்) விதிக்கப்பட்டிருக்கிறது.

    குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது காதலி லோரி மில்ரியானுக்கு கடந்த ஜூன் மாதம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க புலனாய்வு துறையின் திறமையையும், உண்மையையை வெளியில் கொண்டு வர அவர்கள் எடுத்த முயற்சிகளையும் அனைவரும் பாராட்டுகின்றனர்.

    • மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
    • பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தொகுதியில் உரப்பனூர், வாகைக்குளம் கண்மாய்கள் தொடர் மழை காரணமாக நிரம்பின.இதன் காரணமாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார். தொடர்ந்து பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. இந்த அரசு பயிர் காப்பீடு நிவாரணத்தை முழுமையாக பெற்று தர வேண்டும்.

    எடப்பாடி ஆட்சி காலத்தில் 4 ஆண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பெற்று தரப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 7000 ரூபாய் அதிகபட்சமாக அதற்கேற்ற வகையில் நிவாரணம் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஈடுபொருள் மானியமும் வழங்கப்பட்டது.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய மானிய தொகை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×