search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய டெஸ்ட்"

    ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்’ என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்தார். #Pujara #Ashwin #AustralianTest
    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி இருக்கும் இந்திய அணி ஒருமுறை கூட தொடரை வென்றது கிடையாது. பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இடம் பெறாததால் ஆஸ்திரேலியா பலவீனம் அடைந்துள்ளது. எனவே இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சரித்திரத்தை மாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பந்து வீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. 64 டெஸ்ட் போட்டியில் விளையாடி 336 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அஸ்வின், ஆஸ்திரேலிய மண்ணில் 6 டெஸ்ட் போட்டியில் ஆடி 21 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடிலெய்டில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அஸ்வின் புத்திசாலியான பந்து வீச்சாளர் என்று நான் எப்பொழுதும் சொல்வேன். அவர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை நன்றாக கணித்து செயல்படக்கூடியவர். அவர் தனது பந்து வீச்சு முறையில் நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறார். அது என்ன என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மாற்றங்கள் நிச்சயம் அவருக்கு உதவும். அவர் இந்த ஆண்டில் கவுண்டி போட்டியில் போதுமான அளவில் விளையாடி இருக்கிறார். அத்துடன் வெளிநாட்டு மண்ணில் பல்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. 2014-15-ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் விளையாடி உள்ளார். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவர் நல்ல நம்பிக்கையுடன் இருப்பார்.

    நமது அணியின் வேகப்பந்து வீச்சு உலகின் சிறந்த பந்து வீச்சுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஐ.பி.எல். போட்டியின் மூலம் நமது நாட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது உதவிகரமாக இருக்கிறது. நமது அணியில் ஆடும் லெவனில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர்கள் கூட நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 544 ரன்கள் விட்டுக்கொடுத்தது பெரிய விஷயம் இல்லை. அது டெஸ்ட் போட்டி அல்ல. எனவே அது குறித்து கவலைப்படவில்லை. நமது பவுலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். நமது பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த முறை இங்கு நடந்த தொடரில் விளையாடி இருக்கிறார்கள். எனவே இங்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பந்து வீச்சாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர்.

    பேட்டிங்கில் எங்களுக்கு சில இலக்குகள் உள்ளன. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இருப்பதாக நான் நினைக்கவில்லை. நமது அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் போதுமான அனுபவம் கொண்டவர்கள். கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் சிலரது பந்து வீச்சை நான் சந்தித்து இருக்கிறேன். எனவே அவர்களது பலம், பலவீனம் எனக்கு தெரியும். அந்த அனுபவம் இந்த போட்டி தொடரில் எனக்கு உதவும். ஆனால் இந்த போட்டி தொடர் புதியதாகும். எனவே கடந்த காலங்களில் நான் செய்தது பற்றி அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. நான் நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன். அதேநேரத்தில் எதிரணிக்கும் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

    தற்போது நாங்கள் இந்தியாவுக்கு வெளியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருப்பதால் எல்லா போட்டி தொடரிலும் வெற்றி பெற வேண்டும் என்று தான் எப்பொழுதும் நாங்கள் நினைக்கிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் நல்ல தொடக்கம் காண வேண்டும் என்றும் விரும்புகிறோம். இந்த போட்டி தொடரை நிச்சயம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். அதேநேரத்தில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் தான் எங்கள் கவனம் உள்ளது. ஒவ்வொரு போட்டியாக கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிரணியினரை கோபமூட்டும் வகையில் பேசுவது (சிலெட்ஜிங்) குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு எதிரணியினர் செய்யும் சீண்டல்களில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம். நன்றாக விளையாடி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு புஜாரா கூறினார்.
    தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனால் அதன் பிறகு எப்போதுமே முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார். #AUSvIND #DeanJones
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்பு 11 முறை டெஸ்ட் தொடரில் ஆடியுள்ள இந்திய அணி ஒரு தொடரை கூட சொந்தமாக்கியதில்லை. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் இந்த தொடர் எப்படி இருக்கும் என்பது குறித்து 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவரான ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இந்த முறை தொடரை வசப்படுத்தாவிட்டால், அதன் பிறகு ஒரு போதும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவை காட்டிலும் மூன்று வடிவிலான போட்டியிலும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நினைக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியா எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று எனக்கு தோன்றவில்லை.

    பொதுவாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் தற்போது ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாமல் களம் இறங்குகிறது. களத்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் 40 சதவீத ரன்களை சேர்த்து விடும் திறமைசாலிகள். தொடர்ச்சியாக பெரும் பங்களிப்பை அளித்து வந்தனர். அவர்களை போன்று ஆடுவதற்கு யார் இருக்கிறார்கள்?

    இந்திய கேப்டன் விராட் கோலியை வார்த்தைகளால் சீண்டுவதையோ அல்லது கோபமூட்டும் வகையில் நடந்து கொள்வதையோ ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது அவரை மேலும் சிறப்பாக செயல்பட வைத்து விடும். அதற்கு பதிலாக அவருடன் இணக்கமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பேட்டிங்கில் எந்த பகுதியில் கோலி பலவீனமாக இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். கோலி எப்போதும் ‘கவர்’ திசையில் நேர்த்தியாக ஆடக்கூடியவர். அதனால் அவருக்கு வேறு திசையில் பந்து வீசி நெருக்கடி கொடுக்கலாம்.

    இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று விளையாடிய ஆஸ்திரேலிய அணி எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதைய அணியும் உள்ளது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஆலன் பார்டர், பாப் சிம்சன் ஆகிய இரு ஜாம்பவான்களை தவிர்த்து, மற்ற வீரர்களுக்கு அனுபவம் கிடையாது. வீரர்கள் எதிரணியை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. ஆனால் தங்களுக்குள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

    அப்போது ஒவ்வொரு வீரர்களிடமும் இரு ஜாம்பவான்களும் தனித்தனியாக பேசி ஊக்கப்படுத்தினர். ஓரிரு வாரத்திற்குள் சரியான வியூகங்களுடன் ஆஸ்திரேலியா முழு உத்வேகத்துடன் செயல்பட்டது. வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆதரவு அளித்தனர். 3 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் சமனில் (0-0) முடிந்தது.

    இவ்வாறு டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் பதில் அளித்து கூறுகையில் ‘என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்வேன். இப்படி சொல்வதற்கு ஒரே ஒரு காரணத்தை சொல்ல முடியும். இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். திறமை அடிப்படையில் பார்த்தால், இந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த வேண்டும். ஆனால் இந்திய அணியில் ஏதோ ஒன்று இல்லாதது போல் தெரிகிறது.

    மற்றொரு விஷயம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பிரமாதமாக உள்ளது. உள்ளூரில் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்து வீச்சு நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய பந்து வீச்சு இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதனால் தான் இந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று கூறுகிறேன்.

    இந்த தொடர், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கும், விராட் கோலியின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும். அதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’ என்றார்.

    ‘ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர்களில் ஒரு இன்னிங்சில் 350 முதல் 400 ரன்களை சீராக எடுத்து வருகிறது. ஆனால் இந்த தொடரில் ஓரிரு முறை மட்டுமே இவ்வாறு எடுக்க முடிந்தால், ஆச்சரியப்படும் நிறைய பேரில் நானும் ஒருவனாக இருப்பேன்’ என்றும் இயான் சேப்பல் குறிப்பிட்டார். #AUSvIND  #DeanJones
    ×