search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violence against children"

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    எத்தனை வசதிகள், வளங்கள் இருந்தாலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத தேசம், வாழ தகுதியற்ற நாடாகத்தான் கருதப்படும்.

    வாய்ப்புகள்-வசதிகள் பெருகி சமுதாயத்தில் வாழ்க்கை தரம் முன்னேற முன்னேற குற்றங்களும் அதிகரிக்கின்றன.

    எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் கட்டுப்பாடுடன் இருந்த மனிதன், நாகரிக வாழ்க்கையின் சுவையை அறிந்த பின்னர் தான் குற்றங்களை செய்ய ஆரம்பித்தான்.

    நம் வீட்டில் இருக்கும் தாத்தா-பாட்டிகளிடம் கேட்டால் தெரியும்.. “நாடே ரொம்ப கெட்டுப்போய்விட்டது” என்று அங்கலாய்ப்பார்கள். “எங்கள் காலத்தில் எல்லாம் இப்படி வெட்டு, குத்து, கொலைகள், பாலியல் வன்முறைகள் நடந்தது கிடையாது. ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும். இப்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது” என்று ஆதங்கப்படுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் இந்த வருத்தம் நாட்டு நடப்பை படம்பிடித்து காட்டுவதாக அமைந்து இருக்கிறது.

    இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து இருக்கிறது.

    நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு 18 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவாயின. 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை மட்டும் இந்த குற்றங்கள் 14 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

    பாலியல் வன்முறை குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற அதிர்ச்சி தகவலை அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 4,882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 4,816 வழக்குகளும், மராட்டியத்தில் 4,189 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14 சதவீதம்), மராட்டியம் மற்றும் மத்திபிரதேசம் (13 சதவீதம்), மேற்கு வங்காளம் (6 சதவீதம்), ஒடிசா (5 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

    2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,167 கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 682 சம்பவங்கள் நடந்துள்ளன. ராஜஸ்தான் 365 சம்பவங்களுடன் 2-வது இடத்திலும், மத்தியபிரதேசம் 226 சம்பவங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

    பாலியல் பலாத்கார குற்றங்கள் பெருகியதற்கு மக்கள் தொகை பெருக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு காரணம்தான் என்ற போதிலும், மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படும் குற்றங்களை கல்வி அறிவை மேம்படுத்துவதன் மூலமும், கடுமையான சட்டங்கள்-தண்டனைகள் மூலமும் குறைக்க முடியும்.

    ஏனெனில், நம் நாட்டை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு சீனா. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அங்கு குற்றங்கள், வன்முறைகள், ஊழல்கள் எல்லாமே குறைவாகவே உள்ளன.

    அதற்கு காரணம் கடுமையான சட்டங்கள். அங்கெல்லாம் குற்றம் செய்து விட்டு பணத்தாலோ, அதிகார பலத்தாலோ அல்லது சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக புகுந்தோ யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம். அப்படி இருப்பதால் அங்கு சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை தவறு செய்ய அஞ்சுகிறார்கள்.

    ஆனால் இதற்கு நேர் மாறாக நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இங்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பல சட்டங்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவும், ஓட்டைகள் நிறைந்தாகவும் உள்ளன.

    அதனால் தவறுகள் செய்ய பலர் அஞ்சுவதில்லை. பணபலம், அதிகார பலம் இருந்தால் எந்த குற்றங்களை செய்தாலும் சமுதாயத்தில் பயமின்றி சுதந்திரமாக நடமாடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.

    எந்த நாட்டில் தண்டனைகள் கடுமையாக இருக்கிறதோ, அங்குதான் குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதற்கு சீனா மற்றும் அரபு நாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

    குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருப்பதால்தான் அங்கு குற்றங்கள் மிகவும் குறைவு. அங்கு குற்றவாளிகள் பொது இடங்களில் தண்டிக்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். கொலை செய்தாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ நமக்கும் அதே கதிதான் ஏற்படும் என்ற பயமே பலரை குற்றம் செய்யவிடாமல் தடுக்கிறது. பொது இடத்தில் குற்றவாளி ஒருவனின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்கும் ஒருவனுக்கு குற்றம் செய்யக்கூடிய துணிச்சல் எங்கிருந்து வரும்? ஆக கடுமையான தண்டனைகள், மற்றவர்களை குற்றம் செய்வதில் இருந்து தடுக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.

    இதில் மனித உரிமை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை என்றும், குற்றவாளிகளை தண்டிக்காமல் நடமாடவிட்டால், நாட்டில் நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் சமூக நல விரும்பிகள் கூறுகிறார்கள்.



    உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றும், தண்டனை வழங்குவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வற்புறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு கடந்த மாதம் சில திருத்தங்களை செய்து அவசர சட்டம் பிறப்பித்தது.

    இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு பதில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது.

    மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள்ளும், மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள்ளும் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

    இந்த அவசர சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மசோதா கொண்டு வரப்பட்டு நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நடந்த குற்றத்தின் வீரியம் காலப்போக்கில் படிப்படியாக நீர்த்துப்போவதுடன், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒருவித அனுதாப போக்கும் உருவாக்கப்படுகிறது. சாதி, மதம், இனம், அரசியல் ரீதியாக குற்றவாளிகளுக்கு ஆதரவான குரல்களும் எழத்தொடங்குகின்றன.

    இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும், அப்படி குரல் கொடுப்பவர்கள், அந்த நபரால் சீரழிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் வேதனை பற்றியும் சிந்தித்து பார்ப்பது இல்லை என்பதும் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் கூறுகிறார்கள்.

    எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×