search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetables price increased"

    லாரி ஸ்டிரைக் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் குறிப்பிட்ட சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 350 லாரிகளில் காய்கறிகள் வருவதுண்டு. ஆனால் இன்று 200 லாரிகள்தான் வந்தது. வெங்காயம் குறிப்பாக நாசிக் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படும்.

    டீசல் விலை உயர்வு மற்றும் ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் 50 கிலோ மூட்டைக்கு கூடுதலாக 100 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விலையில் 1 கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தக்காளி 13 கிலோ கொண்ட பெட்டி ரூ.180-ல் இருந்து ரூ.250 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் 1 கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் ரூ.30 வரை விற்கப் படுகிறது.

    முட்டைக்கோஸ் 1 கிலோ 20 ரூபாயில் இருந்து 28 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பீன்ஸ் 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்ந்து விட்டது.

    மாம்பழம் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.60-க்கு விலை உயர்ந்துள்ளது.

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. #Truckersstrike
    சென்னை:

    டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தரைவழி போக்குவரத்து சங்கங்களின் கீழ் உள்ள தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட சங்கங்கள் நேற்று முன்தினம் முதல் லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

    இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பாலான முக்கிய லாரி சங்கங்கள் பங்கேற்காததால் மிகப்பெரிய அளவில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் 10 சதவீத லாரிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



    ஆனாலும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய லாரிகள் தமிழகத்திற்கு அதிகமாக வரவில்லை. பருப்பு வகைகள், மைதா, காய்கறிகள், ஜவுளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே வருகின்றன. இதனால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

    சென்னையில் லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக இல்லை. பெரும்பாலான லாரிகள் ஓடுவதால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக வர வேண்டிய 350 லாரிகளில் 220 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

    மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதனால் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த வேலை நிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்கின்றன என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்து விட்ட நிலையில் திடீரென ஒரு சிலர் பொதுமக்களையும், லாரி உரிமையாளர்களையும் குழப்பி ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக் குழுவில் முடிவு செய்வோம் என்றார். #Truckersstrike
    லாரிகள் ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடித்து வருவதால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம், சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் நாடு முழுவதும் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரிகள் ஓடாததால் பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறவில்லை.

    முக்கியமான லாரி சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடாததால் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு பிரிவினர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் லாரிகள் அதிகமுள்ள நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பெரும்பாலான லாரிகள் வழக்கம் போல் ஓடின. சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் அதிகளவு இயக்கப்படவில்லை. அதே போல வெளி மாநிலங்களில் இருந்தும் குறைந்த அளவில்தான் லாரிகள் சென்னைக்கு வருகின்றன.

    இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களின் போராட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

    சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. அழுகும் பொருளான காய்கறிகள் விலை உடனே உயர்ந்து விட்டது.

    லாரிகள் ஸ்டிரைக் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் லாரிகள் இன்று வந்தன. வழக்கமாக தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் வருவது உண்டு. ஆனால் ஸ்டிரைக் காரணமாக 200 லாரிகள் மட்டுமே இன்று வந்துள்ளன.

    இதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பீன்ஸ், தக்காளி, உருளை, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    லாரி வாடகையும் உயர்ந்து இருப்பதாக மார்க் கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    லாரிகள் குறைவாக வருவதால் குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பச்சை மிளகாய் போன்றவை விலை உயர்ந்துள்ளது. கேரட், பீட்ரூட், நூல்கோல் ஆகியவை 10 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. நாளையும் லாரிகள் வரவில்லை என்றால் மேலும் உயரும் என்றார்.

    ×