search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது நாள் ஸ்டிரைக் நீடிப்பு - லாரிகள் ஓடாததால் காய்கறி விலை 20 சதவீதம் உயர்வு
    X

    2-வது நாள் ஸ்டிரைக் நீடிப்பு - லாரிகள் ஓடாததால் காய்கறி விலை 20 சதவீதம் உயர்வு

    லாரிகள் ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடித்து வருவதால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம், சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் நாடு முழுவதும் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரிகள் ஓடாததால் பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறவில்லை.

    முக்கியமான லாரி சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடாததால் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு பிரிவினர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் லாரிகள் அதிகமுள்ள நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பெரும்பாலான லாரிகள் வழக்கம் போல் ஓடின. சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் அதிகளவு இயக்கப்படவில்லை. அதே போல வெளி மாநிலங்களில் இருந்தும் குறைந்த அளவில்தான் லாரிகள் சென்னைக்கு வருகின்றன.

    இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களின் போராட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

    சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. அழுகும் பொருளான காய்கறிகள் விலை உடனே உயர்ந்து விட்டது.

    லாரிகள் ஸ்டிரைக் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் லாரிகள் இன்று வந்தன. வழக்கமாக தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் வருவது உண்டு. ஆனால் ஸ்டிரைக் காரணமாக 200 லாரிகள் மட்டுமே இன்று வந்துள்ளன.

    இதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பீன்ஸ், தக்காளி, உருளை, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    லாரி வாடகையும் உயர்ந்து இருப்பதாக மார்க் கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    லாரிகள் குறைவாக வருவதால் குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பச்சை மிளகாய் போன்றவை விலை உயர்ந்துள்ளது. கேரட், பீட்ரூட், நூல்கோல் ஆகியவை 10 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. நாளையும் லாரிகள் வரவில்லை என்றால் மேலும் உயரும் என்றார்.

    Next Story
    ×