search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TV Govt"

    • தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான வீடுகள் இன்னும் தண்ணீருக்குள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளன.

    பால், குடிநீர் பற்றாக் குறையால் மக்களிடம் கடும் தவிப்பு நிலவுகிறது. வாகனப் போக்குவரத்து இன்று முதல் 90 சதவீதம் இயங்கத் தொடங்கியுள்ளது.

    பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்ததாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

    எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதில் உதவி கேட்டிருந்தார்.

    இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

    மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணையில் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர் கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×