search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assmebly"

    ‘தூத்துக்குடி சம்பவத்துக்கு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்டுவோம்’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று வெளிநடப்பு செய்த பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக நேற்று (நேற்று முன்தினம்) அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இது ஒரு கண் துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ள ஆணை. உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதென அரசு முடிவு செய்தால், அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி, கொள்கை முடிவெடுத்து, அதை தீர்மானமாக நிறைவேற்றியிருக்க வேண்டும். அதன்பிறகு அரசாணை வெளியிட்டால், எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் செல்லுபடியாகாது. அந்தவகையில் அரசாணை வெளியிடாமல், அந்த தனியார் ஆலை நீதிமன்றத்துக்கு சென்று அனுகூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அந்த ஆலையின் முதலாளியிடம் ஏற்கனவே வாங்கியிருக்கக்கூடிய மாமூலை உயர்த்தி, இன்னும் அதிகமாக வாங்கிக்கொள்வதற்காக, இந்தப் பணியை திட்டமிட்டு ஆளுகின்ற ஆட்சியாளர்களும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செய்திருக்கிறார்கள்.

    நாங்கள் திரும்ப திரும்ப சொல்ல விரும்புவது, துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு, மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., நெல்லை சரக டி.ஐ.ஜி., மதுரை மண்டல ஐ.ஜி., மாநில உளவுத்துறை ஐ.ஜி., தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. ஆகியோர் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


    அதுமட்டுமல்ல, அவர்கள் அனைவரையும் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து, இவற்றுக்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

    அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தீர்மானம் நிறைவேற்றி, அரசாணை வெளியிடும் வரையில், நாங்கள் இந்த அவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை தி.மு.க. எடுத்திருக்கிறது என்ற எங்களுடைய முடிவையும் அறிவித்துவிட்டு, அவையை புறக்கணித்து வெளியேறினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துப்பாக்கிசூடு என்ற வார்த்தையும், அதில் எத்தனை பேர் இறந்தார்கள், காயமுற்றார்கள் என்ற விவரங்களும் வெளியிடப்படவில்லையே?

    பதில்:- உண்மைகளை எல்லாம் மூடி மறைக்கின்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதையும் நான் அவையில் பதிவு செய்திருக்கிறேன். இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை கூட அரசின் சார்பில் அதிகாரபூர்வமாக வரவில்லை. சட்டசபையில் இன்றைக்கு (நேற்று) விவர அறிக்கையை வைத்திருக்கிறார்களே தவிர, அதுவும் ஊரை ஏமாற்றுகின்ற கபட நாடகம் தான்.

    அதுகுறித்து நாங்கள் பேசினால், ‘ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு கொண்ட நீதி விசாரணை வைக்கப்பட்டு இருக்கிறது, எனவே நீங்கள் பேசக்கூடாது’, என்று சபாநாயகர் அனுமதி வழங்க மறுக்கிறார். ஆனால், முதல்-அமைச்சர் வைத்துள்ள விவர அறிக்கையில் ‘ரவுடியிசம்’, ‘தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர்’, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். நீதி விசாரணை வைத்திருக்கின்றபோது அவர் மட்டும் எப்படி இந்த வார்த்தைகளை சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல, முதல்-அமைச்சர் பேட்டி தந்தபோதும் இதே வார்த்தைகளை சொல்லியிருக்கிறார்.

    எனவே, அவரே நீதிபதியாக மாறி ஏற்கனவே தீர்ப்பை சொல்லிவிட்டார். அவர் வைத்திருக்கின்ற ஒரு நபர் குழுவும் கூட வெறும் கண் துடைப்புக்காக மட்டுமே. இதெல்லாம் மக்களுக்கு தெளிவாகவே தெரியும்.

    கேள்வி:- துப்பாக்கிசூட்டுக்கு தாசில்தார்கள் உத்தரவிட்டதாக அறிவித்து விசாரணையை திசை திருப்புகிறார்களே?

    பதில்:- நேற்றே (நேற்று முன்தினம்) நான் கூறியது போல, முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தை நாடி, வழக்கு தொடர்ந்து, யார் யார் குற்றவாளிகள் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SterliteProtest #TNAssembly #MKStalin
    ×