search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tapas Roy"

    • கடந்த ஜனவரி 12-ந்தேதி அமலாக்கத்துறை இவரது வீட்டில் சோதனை நடத்தியது.
    • திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் இருந்து விலகினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக தபஸ் ராய் திகழ்ந்து வந்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

    நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருக்காக குரல் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இதனால் கட்சி மீது அதிருப்தி அடைந்த அவர் கடந்த திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சியில இணைந்துள்ளார். மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதா கொடியை பெற்றுக் கொண்டு அந்த கட்சியில் இணைந்தார்.

    "சொந்த நலனுக்கான கட்சியில் இருந்து விலகிய தபஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும், பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி "தபஸ் ராய் எங்கள் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. கட்சியுடன் ஆலோசனை நடத்தி, உயர்த் தலைவர்கள் சம்மதம் பெற்ற பிறகு  கட்சியில் இணையும்படி கேட்டுக்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    பா.ஜனதாவில் இணைந்த தபஸ் ராய் "தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராட விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஜனவரி 12-ந்தேதி அமலாக்கத்துறை என்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியது. கட்சியில் இருந்து யாரும் முன்வந்து ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. மேலும் மனவேதனை அடைந்த எனது குடும்பத்தினரிடம் ஆறுதலாக கட்சித் தலைவர்கள் பேசவில்லை. ஆகவே, நான் மிகவும் கவலை அடைந்தேன். பா.ஜனதாவால் என்னுடைய வீட்டிற்கு அமலாக்கத்துறை அனுப்பப்படவில்லை. சுதிப் பனார்ஜிதான் அனுப்பினார். அவர் என்னைக் கண்டு பயப்படுகிறார். பொறாமைப்படுகிறார்" என்றார்.

    முறைகேட்டில் சிக்கியவர்கள் பா.ஜனதாவில் இணைந்தால் அவர்களை மத்திய அமைப்புகள் கண்டு கொள்ளாது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தபஸ் ராய் அமலாக்கத்துறையால் சோதனைக்கு உட்பட்ட நிலையில் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

    ×