search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramajayam murdered case"

    கொலையாளிகள் தப்பி சென்றதாக சந்தேகிக்கப்படும் வெர்ஸா மாடல் கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    தமிழக நகர்புற துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சி தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    இக்கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சமீபத்தில் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கொலை நடந்தன்று சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து கொலையாளிகள் வெர்ஸா மாடல் காரில் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் தப்பி சென்றதாக சந்தேகிக்கப்படும் வெர்ஸா மாடல் கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த அந்த காலகட்டத்தில் வெர்ஸா கார் வைத்திருந்த உரிமையாளர்களின் பட்டியலை அந்தந்த பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் அதன் உரிமையாளர்களின் முகவரியை அடிப்படையாக வைத்து நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட மாடல் கொண்ட கார் யார் வைத்திருந்தார்கள், கார் காணாமல் போனதா அல்லது வேறு யாருக்கு விற்பனை செய்யப்பட்டதா அல்லது யாரிடமாவது விலைக்கு வாங்கப்பட்டதா என்பது போன்ற பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட அந்த மாடல் கார் 2012-ம் ஆண்டு காலகட்டத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வந்தது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பட்டியல் அடிப்படையில் கார் உரிமையாளர்களை நேரில் சந்தித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 60 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×