search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "summoned"

  வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. #VijayMallya #Summon
  மும்பை:

  வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் நேரில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

  பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

  இதற்கிடையே வெளிநாடு தப்பிச்செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அவரது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் அனுமதி கோரி இருந்தனர்.

  இந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி கடன் மோசடி வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

  இந்த சட்டத்தின்படி விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராக தவறினால், வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

  வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.  #VijayMallya #Summon #Tamilnews 
  சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக ஜூலை 7-ம் தேதி டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகுமாறு மத்திய முன்னாள் மந்திரி சசி தரூருக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டது. #ShashiTharoor #SunandaPushkar #summon
  புதுடெல்லி:

  மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.

  ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

  இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

  சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

  இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில், இவ்வழக்கில் ஜூலை  7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூருக்கு டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் இன்று சம்மன் அனுப்பியுள்ளார். #ShashiTharoor #SunandaPushkar #summon

  2017-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சல்மான் கானின் சகோதரரான நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். #ArbaazKhan #IPLbettingcase

  மும்பை:

  சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 11 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில், மும்பை போலீசார் நடத்திய சோதனைகளின்போது கடந்த ஆண்டு நடந்த 10-வது சீசனின் போது சூதாட்டம் நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.

  இந்த சூதாட்ட கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.   தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் அர்பாஸ் கானை விசாரணைக்கு வரும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், பல படங்களில் நடித்துள்ளார். படங்கள் தயாரித்துள்ள அவர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். #ArbaazKhan #IPLbettingcase
  ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. #Malaysia #NajibRazak
  கோலாலம்பூர்:

  மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.

  எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக், பிரதமர் பதவியை இழந்தார். மேலும், 92 வயது மகாதீர் முகமது பிரதமர் ஆனார். அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

  அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பண கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின.

  இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவாரா என தெரியவரும்.  #Malaysia #NajibRazak
  ×