என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lanka Crisis"
- சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
- மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2021ஆம் ஆண்டிற்கான அதிகரிக்கப்பட்ட செலவீனமான 2,796.4 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 929.4 பில்லியன் ரூபாய் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அனுமதி கோரப்படுகிறது. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு 3,200 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட்டில் இந்த கடன் வரம்பில் 892 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
தினசரி மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டானது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் முடிந்தவரை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறி உள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
- மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
- ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்ட பொருட்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு, எரிப்பொருள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதன் எதிரொலியாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள், தொலைபேசிகள், பிரஷர் குக்கர்கள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட 300 பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், இந்த பொருட்கள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நாட்டிற்கு வந்தாலும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்ட சமூக வருகை பதிவு காலாவதியானதால் வெளியேறினார்
- கோத்தபய தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர்:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்த நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி பதவியை ராஜினாமா செய்தார்.
சிங்கப்பூரில் கோத்தபய தங்கி இருப்பதற்கான, சமூக வருகை அனுமதி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேக்கு மேலும் 2 வாரம் அனுமதியை நீட்டிக்கும்படி சிங்கப்பூரிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்துக்கு கோத்தபய ராஜபக்சேவின் தற்காலிக பயணத்தை தாய்லாந்து பிரதமர் உறுதி செய்துள்ளார். மேலும், நிரந்தர அடைக்கலம் கோரும்போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டேன் என்று கோத்தபய உறுதியளித்திருப்பதாக தாய்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை.
- அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






