என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயகல்பம்"

    • காயம் என்றால் உடல், கல்பம் என்றால் அழிவு இல்லாதது என்று பொருள்.
    • நரம்பு ஊக்க பயிற்சி என்று மற்றொறு பெயர் உண்டு.

    வாசகர்களே! கடந்த பகுதியில் இடம்பெற்ற உடம்பை வளர்த்து உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் பாடிய பாடலோடு நமது சிந்தனையை தொடர்வோம்.

    உடம்பு தான் வளரும், எப்படி என்றால் நம்மை சிறு வயதில் பார்த்தவர்கள் சில வருடங்கள் கழித்து நம்மை அவர்கள் பார்க்கும் போது அவர்கள் நம்மிடம், நான் உன்னை சில வருடங்களுக்கு முன் பார்க்கும் போது சிறுவனாக இருந்தாய், இப்போது பெரிய மனிதரை போல வளர்ந்து இருக்கிறாய் என்பார்கள்.

    இதில் இருந்து உடல் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை வளரும். ஆனால் திருமூலர் உயிர் வளர்த்தேனே என்கிறார். உயிர் எப்படி வளரும்? பிறந்த சிறு குழந்தைக்கும் ஒரே உயிர் தான், அதே போல 100 வயதை கடந்தவர்களுக்கும் ஒரே உயிர் தான். எனவே இதில் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதாவது உயிர் எப்படி வளரும்?

    இதற்கு பொருள் என்னவென்றால், உயிரை கர்ம வினை பதிவுகளை கடந்து, நீண்ட ஆயுளாக எப்படி மாற்றுவது என்பது தான் உண்மையான விடையாகும். இந்த உயிரை வளர்ப்பதற்காக உபதேசங்களையும், உபாயங்களையும் சித்தர்கள் மறைபொருளாக வைத்து பாடல்கள் மூலமாக நமக்கு கொடுத்துள்ளார்கள்.

    அந்த பாடல்களை எடுத்து கிட்டதட்ட 40 ஆண்டுகள் தன்னையே ஒரு ஆய்வுக்கூடமாக பயன்படுத்தி கொண்டு சித்தர்கள் கொடுத்த பொக்கிஷத்தை பாமர மக்களுக்கும் எளிதில் விளங்கும் படி, அந்த உயிரை வளர்க்கின்ற வித்தையை பயிற்சியாக கொடுத்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. அந்த கலையின் பெயர் தான் காயகல்பம் எனப்படும்.

    காயம் என்றால் உடல், கல்பம் என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். இந்த உடல் அழியாமல் இருப்பதற்கு செய்யக்கூடிய ஒரு அற்புதமான பயிற்சி தான் காயகல்பம்.


    உடல் ஆனது எப்போது அழியும்? உடலை விட்டு உயிர் பிரியும் போது தான் உடல் அழியும். அப்படி என்றால், உடல் அழியாமல் இருப்பதற்கு, உயிரை நீண்ட ஆயுளாக மாற்றும் பயிற்சி தான் காயகல்பம் ஆகும்.

    உடலுக்கு உடற்பயிற்சி என்றால் உயிருக்கு காயகல்பம். உயிர் என்பது காற்று, வாரி என்று சொல்லுவோம். எனவே தான் இந்த உடலை "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்கின்றார்.

    இதற்கு நரம்பு ஊக்க பயிற்சி என்று மற்றொறு பெயர் உண்டு. சித்தர்கள் இதை சாகாக்கலை என்று குறிப்பிடுகின்றனர். வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பயிற்சியினால் நமக்கு கீழ் கண்ட மூன்று கேள்விகளுக்கு நிச்சயமாக விடை கிடைத்துவிடும்.

    1. நோய் வராமல் தடுக்க முடியுமா?

    2. முதுமையை தவிர்க்க முடியுமா?

    3. மரணத்தை வெல்ல முடியுமா?

    சாதாரணமாக கேட்டால், இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையானது முடியாது என்று தான் கூறுவோம். ஆனால் இந்த காயகல்பம் பயிற்சி செய்பவர்கள் தங்கள் அனுபவத்தினால் இந்த மூன்றும் சாத்தியம் என்று கூறுகின்றனர்.

    நாம் பிறக்கும்போது நோயுடன் தான் பிறந்து இருக்கின்றோம். அந்த நோய் ஆனது, அவரவர்கள் கர்மவினை பதிவுகளுக்கு ஏற்றபடி பல வகை நோய்களாக அந்தந்த காலத்திலே உருவெடுக்கும். இந்த நோய்கள் எப்போது நமக்கு வரவேண்டும் என்று நம்முடைய வித்திலே பதிவாகி இருக்கிறது. இதை தான் நாம் யோகத்தில் கர்மா என்று அழைக்கிறோம்.

    இந்த வித்திலே இருக்கின்ற பதிவுகளை எப்படி போக்குவது என்றால், அந்த வித்துவையே தூய்மை செய்து விட்டால் அதில் இருந்து நாம் தப்பித்து கொள்ளளாம். அது போல முதுமை எப்போது வரும்? வயது அதிகமாக, அதிகமாக நமக்கு முதுமை வரும். அறிவியல் பூர்வமாக பேச வேண்டும் என்றால் நரம்புகள் தளர்ச்சி அடையும் போது, நமது உடல் மேல்பகுதியில் உள்ள தோல் சுருக்கம் விழுந்து முதுமை தெரியும்.

    இந்த நரம்புகளை தளர்ச்சி அடையாமல் செய்யக் கூடிய பயிற்சி தான் காயகல்பம் அல்லது நரம்புக்கு பயிற்சி என்று பெயர். இப்படி வித்துவை தூய்மை செய்து, நரம்புகளுக்கு ஊக்கம் கொடுத்து விட்டால் உயிர் வளர்ந்து நீண்ட ஆயுளாக மாறும். இது தான் மரணத்தை வெல்லுதல். இதை சித்தர்கள் வாழும் காலத்திலேயே மனிதர் ஜீவபிரம்ம ஐக்கிய முக்திநிலை தரும் கலை என்று காயகல்பத்தை குறிப்பிடுகின்றனர். ஒரு மனிதருக்கு நோயின் ஆரம்ப அறிகுறி எது என்றால் வலி தான். அதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது காலபோக்கில் சில வருடங்களில் நோயாக மாறும். நோய் வந்தவுடன் உடல் இயக்கம், உயிர் இயக்கம், மன இயக்கம் குறைந்து அடுத்த நிலையான மரணத்தை நோக்கி நம்மை அழைத்து செல்லும்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    எனவே வலி வரும் நிலையிலோ அல்லது இந்த வலியே வராமல் தடுப்பதற்கு உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு இந்த நான்கு விஷயங்களில் நாம் அளவு முறை கடைபிடித்தால் ஐந்தாவதாக நல்ல எண்ணம், சொல், செயல் உருவாகும். இதையே வேதாத்திரி மகரிஷி ஐந்தில் அளவு முறையை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

    ஆனால் இதை எல்லோரும் பொதுவாக பேசுவோமே தவிர கடைபிடிப்பது கடினம். ஆனால் காயகல்பம் பயிற்சி செய்யும் போது இந்த ஐந்தில் அளவுமுறையானது தானாக நமக்கு வந்துவிடும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் விதியை மதியால் வெல்ல முடியும். இந்த பயிற்சி செய்வதால், இளமை காத்து, நீண்ட காலம் இந்த உலகத்தில் வாழ்க்கையை வாழ்வது என்பது நம்மால் முடியும்.

    இதற்கான வழிகளை சித்தர்கள் எழுத்துக்கள் / பாடல்கள் மூலம் நமக்கு சொன்னாலும், அவர்களுடைய பரிபாஷை நமக்கு புரியவில்லை. இதை தான் வேதாத்திரி மகரிஷி தனது ஆராய்ச்சியின் மூலமாக இந்த உலகத்திற்கு இப்பயிற்சியை அளித்தார்.

    மேலும் மகரிஷி, காயகல்பம் பயிற்சி பற்றி குறிப்பிடும் போது, பொதுவாக மனிதர்களுக்கு தனது ஆறாவது அறிவிற்கு இயற்கையின் நியதிகளை உணர்ந்து, அதை ஓரளவு வெல்லும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை மனிதர்கள் பயன்படுத்தி, உடலில் இருந்து பிரியும் உயிர், பிரிகின்ற வேகத்தை கட்டுபடுத்தி கொண்டால் நம்மால் மரணத்தை நீண்ட நாட்கள் தள்ளி போட முடியும். இதற்கு இப்பயிற்சி மிகவும் அவசியம் என்று குறிப்பிடுகிறார்.

    14 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 80 வயது வரை உள்ளவர்களும் எளிய முறையில் செய்ய கூடிய பயிற்சியாகும். மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், இளமை நோன்பு காக்கும் ஆண், பெண் அனைவருக்கும் பெரும் நன்மை பயக்கும் பயிற்சி இது.

    மேலும் வேதாத்திரி மகரிஷி இந்த பயிற்சி செய்வதால், நம்முடைய தீவினைகள் கழிந்து ஆன்மா தெளிவு பெறும் என்று குறிப்பிடுகிறார். இந்த பயிற்சி செய்வதால் முதலில் உடலில் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

    இதனால் உடல் நலமும், மன நலமும் உண்டாகும். மேலும் ஆஸ்துமா, சர்க்கரை குறைபாடு, மூக்கில் நீர் வடிதல், மூல நோய், தோல் வியாதிகள், கண்குறைபாடுகள், உடல் எடை குறைத்தல், ரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த காயகல்பம் பயிற்சியை தொடர்ந்து செய்து வர பலன்கள் கிடைக்கும்.

    குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். மாணவ பருவத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சியாகும். அதே போல கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி, பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், கருப்பை நீர் கட்டி, நார்கட்டி போன்ற பிரச்சனைக்கும் இப்பயிற்சி மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    உயிர் என்பது நம் கண்களுக்கு தெரியாதது. அந்த உயிரை நீண்ட ஆயுளாக மாற்ற மகான்கள் முதல் அறிவியல் மருத்துவர்கள் வரை எவ்வளவோ ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் வேதாத்திரி மகரிஷி இந்த உயிருக்கான பயிற்சியை அளித்துள்ளார். இந்த பயிற்சியை காலை மற்றும் மாலை இருவேளைகளில் செய்யும் போது (5 நிமிடம் பயிற்சி) இதன் பலன்கள் நமக்கு அபரிமிதமாக கிடைக்கும்.

    இந்த பயிற்சியானது அறிவு திருக்கோவில் (பொள்ளாச்சி) மற்றும் உலகம் எங்கிலும் உள்ள உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவு திருக் கோவில்கள், அறக்கட்டளைகள், தவ மையங்களில் அளிக்கப்படுகிறது.

    உயிரை வளர்க்கும் இப்பயிற்சியை நாம் செய்வோம், நம் உயிரையும் திருமூலர் கூறுவது போன்று நீண்ட ஆயுளாக மாற்றுவோம். மரணத்தை வெல்வோம். உடல் சார்ந்து, உயிர் சார்ந்து நமது ஆராய்ச்சி தொடரில் அடுத்து மனம் சார்ந்த பயிற்சியில் நமது ஆராய்ச்சியை தொடர்வோம்.

    போன்: 9444234348

    ×